(வி - ம்.) செம்மல் - தலைவன். ஓப்பி - ஓட்டி; அகற்றி. நின்னுலகம் என்றது கந்தவுலகத்தை. (26) | இந்திரன் வேட்ட வெல்லா மெம்பிரா னருளிச் செய்தான் | | அந்தரர் தாமுந் தத்த மாக்கமுற் றருளப் பெற்றார் | | பைந்தருக் காமதேனுப் பகர்நிதி மணிக ளாய்தம் | | சந்தமார் சுதன்ம மென்னுஞ் சபைமுத லனைத்தும் பெற்றான். |
(இ - ள்.) இவ்வாறு தேவேந்திரன் விரும்பிய வரங்களை எல்லாம் எம்பெருமான் வழங்கினன். மேலும் ஏனை வானவரும் தாந்தாம் விரும்பிய பேறுகளை அருளப்பெற்றனர். தேவேந்திரன் தனக்குரிய பசிய கற்பகத்தரு காமதேனு புகழப்படும் சங்கநிதி பதுமநிதிகள் மணிகள் படைக்கலன்கள், எதிரொலியமைந்த சுதன்மமென்னும் சபை என்னும் இவற்றை யுள்ளிட்ட எல்லாப் பொருளையும் பெற்றனன். (வி - ம்.) வேட்ட - பலவறிசொல். அந்தரர் - வானவர். தரு - கற்பகம். சந்தம் - அழகுமாம். (27) | பன்முறை தாழ்ந்து போற்றிப் பண்ணவர் கணங்கள் சூழ | | வின்மலி கோயி னீங்கி விசும்புபுக் கமர்ந்தா னந்தக் | | கொன்மணி வயிர வேலான் கொண்டுசென் றாட்டிச் சாத்தும் | | தென்மணி நீரும் பூவுந் திருமுடி யென்று மேறும். |
(இ - ள்.) அருள்பெற்ற அவ்விந்திரன் பலமுறையும் பணிந்து போற்றித் தன் தேவர்கணங்கள் புடைசூழ்ந்துவர ஒளிமிக்க திருக்கோயிலினின்றும் புறப்பட்டுத் தனது வானாட்டிற்சென்று வதிவானாயினன். அந்தப் பெருமையுடைய அழகிய வேற்படையுடைய முருகப்பெருமானுடைய அழகிய முடிமிசை அச்சுனையிலுள்ள அழகிய நீலமணிபோன்ற நீரும் செங்கழுநீர் மலரும் நாடோறும் ஏறாநின்றன. (வி - ம்.) பண்ணவர் - தேவர். வில் - ஒளி. கொன் - பெருமை. வேலான் திருமுடி ஏறும் என இயைக்க. (28) | இந்திர தீர்த்த மென்ன விருஞ்சுனை நாம மெய்திற் | | றிந்திர நகர மென்று மியம்பிடப் படுமால் வேதன் | | இந்திரன் வாழ்வு மேனை யிமையவர் வாழ்வு மெல்லாம் | | இந்திர ஞால மாக வின்னருள் விளைக்கு மவ்வூர். |
(இ - ள்.) மலரோனும் இந்திரனும் என்னும் இவர்கள் வாழ்க்கையும் ஏனைய தேவர்கள் வாழ்க்கையும் இந்திரசாலம்போன்று பொய்மையாம்படி அடியார்க்கு மெய்யுணர்வாகிய இனிய அருளையுண்டாக்கும் இத்திருத்தணிகை நகரம் மேற்கூறிய காரணத்தானே இந்திரநகர மென்றும் ஆண்டுள்ள பெரியசுனை இந்திரதீர்த்தம் என்றும் பெயர் பெற்று வழங்கப்படும். (வி - ம்.) இனி, மலரோன் இந்திரன் ஏனைத்தேவருமாகிய இவர்கள் (இழந்துவிட்ட) வாழ்க்கையனைத்தும் இந்திரசால வித்தை |