பக்கம் எண் :

900தணிகைப் புராணம்

 வரைவல மிடந்திரி தரக்கர நீட்டி
           வாங்கினர் கடைந்தனர் வல்விடம் பிறந்த
 திரையெனப் புவனங்க ளனைத்தையு மடுப்ப
           வெழுந்தது விதும்பின ரிரிந்தன ரெவரும்.

(இ - ள்.) ஒழுங்குபட்ட கதிரையுடைய குளிர்ந்த திங்கள் மண்டிலத்தைத் தூணாக நிறுத்தி நீண்ட மந்தரமலையை மத்தாக நாட்டி, கூறப்படுகின்ற வாசுகியென்னும் பாம்பினைக் கயிறாகச் சுற்றி ஒளிர்கின்ற அழகிய திருப்பாற்கடல் கொறுகொறு வென்று முழங்கும்படி அம்மந்தரமலை வலமும் இடமும் சுற்ற அத்தேவர்களும் அவுணர்களும் தங் கைகளை நீட்டி அவ்வரவினைப்பற்றி இழுத்துக் கடையாநின்றனர். அப்பொழுது அப்பாம்பு நலிவெய்திக் கக்கிய தீநஞ்சு தோன்றிற்று. அந்நஞ்சு தான் பிறந்த கடல்போன்று உலகம் அனைத்தையும் விழுங்கவெழுந்தது. அதுகண்ட அமரரும் அசுரரும் அஞ்சிநடுங்கி நாற்றிசையினும் ஓடலாயினர்.

(வி - ம்.) நிரை - ஒழுங்கு. தறி - தூண். கொறுகொறு -
ஒலிக்குறிப்பு. வரை - மந்தரம். விதும்புதல் - நடுங்குதல்.

(3)

 கயிலையை யடைந்தன ரிரந்தனர் சோதிக்
           களத்தினைக் கறைக்கள மாக்கின ருய்ந்தார்
 வெயிலுமிழ் மணிப்பணி யணியென மிளிரும்
           வித்தக னருள்கொடு மீட்டுமக் கடலைத்
 தயிரெனக் கடைந்தன ரெடுத்தன ரமிழ்தந்
           தம்பதி யடைந்தனர் வாசுகி யுடலம்
 பயில்வரை யுரிஞலிற் பிணர்பட வலியும்
           பாறிய தாய்ந்தது படர்ந்தது தணிகை.

(இ - ள்.) கயிலாய மலையின்கண் எழுந்தருளிய சிவபெருமான்பாற் றஞ்சம்புக்கனர்; அப்பெருமானுடைய மிடற்றினை நீலமிடறாகச் செய்ததொரு செயலானே அனைவரும் உய்ந்தனர். மீண்டும் ஒளிவிடும் மணியையுடைய பாம்புகள் அணிகலனாக ஒளிருகின்ற அவ்விறைவனுடைய திருவருள் பெற்று அத்திருப்பாற்கடலைத் தயிரைக்கடையுமாறு போல எளிதாகக் கடைந்து அமிழ்த மெடுத்துக்கொண்டு தத்தம் நகர்க்குச் சென்றனர். இனிக் கடல்கடைதற்குக் கயிறாகவமைந்த வாசுகி அம்மந்தரமலை உராய்ஞ்சியதனாலே தன்னுடம்பெலாம் செதும்புபட்டிருத்தலையும், தனது ஆற்றல் சிதறிப்போனமையும் உணர்ந்தது; அக்குறைகளை அகற்றக் கருதி இத்திருத்தணிகைமலையை எய்திற்று.

(வி - ம்.) சோதி - இறைவன். இறைவனுடைய ஒளிக்களத்தினை எனினுமாம். சோதிக்களத்தினைக் கறைக்களமாக்கினருய்ந்தார் என்றது இறைவன் அந்நஞ்சினையுண்டதனாலே உய்ந்தனர் என்றவாறு.

(4)

வேறு

 விண்டலர் கஞ்ச மலர்ந்து விரைக்கழு நீர்பூத்து
 வண்டுளர் கின்ற குமார திருத்த மகிழ்ந்தாடிக்