(வி - ம்.) மண்ணை - பேய், மந்திரம் - மாரண மந்திர முதலியன. வெருட்சி - ஒருவகைநோய். தகை - அழகு. தவளம் - வெண்மை. (6) | நலிபெரும் பாவமு நாச மாக்கலான் | | ஒலிகெழு பன்மமுள் ளுடற்று பீழைகள் | | சலமெனக் கழுவலிற் சாரம் வேட்டவப் | | பலனுற விளங்கலிற் பசித மென்பரால் |
(இ - ள்.) உயிரை நலியாநின்ற பெரிய தீவினைகளை அழித்தலானும், மந்திரவொலி பொருந்திய அத்திருநீறு உள்ளத்திலே வருத்தா நின்ற அழுக்குகளை நீர்போன்று கழுவித் தூய்தாக்குதலானும், சாறாக விரும்பிய அந்தச் சிவத்துவ விளக்கமாகிய பயன் உண்டாகும்படி விளக்குதலானும் அத்திருநீற்றினைப் பசிதம் என்று சான்றோர் வழங்குவர். (வி - ம்.) ஒலி - மந்திரவொலி. பீழை - அழுக்கு. ஆணவ முதலியன. சலம் - நீர். சாரம் - சத்து. பலன் - சிவத்துவ விளக்கம். பசிதம் - சிவத்துவத்தை விளக்குவது. (7) | தயங்கிய நீறுடற் றரித்தி லாரெனின் | | இயங்கற மெத்துணை யியற்றி முற்றினும் | | பயங்கது வுதலிலை பலவு முற்றிய | | இயங்கலில் பயிர்க்குறு காவ லின்றென. |
(இ - ள்.) விளங்கிய திருவெண்ணீற்றினை உடலின்கண் அணிந்திலாராயவிடத்து நடைபெறும் அறங்கள் எவ்வளவுஞ் செய்து முடிப்பினும், அவ்வறங்களின் பயனை அவர் எய்துதலில்லையாம்; அஃதென்போலவெனின்? ஏருழுதல் எருவிடுதல் முதலிய பல தொழில்களையும் நன்கு செய்து முடித்த விடத்தும் நிலையியற்பொருளாகிய நெற்பயிரின் கண் இன்றியமையாத காவலில்லையாயவிடத்துப் பயனுண்டாகாதாற் போன்றென்க. (வி - ம்.) தயங்கிய - விளங்கிய. இயங்குதல் - நடைபெறுதல். பயம் - பயன். இயங்குதலில்லாத பயிர் என்றது நிற்பனவாகிய உயிரினத்தைச் சேர்ந்த பயிர் என்றவாறு. (8) | உரைத்தன வறமுனாற் றார்க ளாயினும் | | வரைத்தவவ் வறப்பயன் வருதல் காண்பரால் | | தரைத்தலை நெறிமுறை தழங்க நாட்டுவோய் | | புரைத்தப விதியினாம் பூதி பூசுவோர். |
(இ - ள்.) நூல்களாற் கூறப்பட்ட அறங்களைச் செய்திலரே யாயினும், குற்றந்தீர நூல் கூறிய விதியினாலே செய்யப்பட்ட திருநீற்றினை அன்போடு அணிபவர் வரையறை செய்யப்பட்ட அவ்வறங்களின் பயன் தமக்குத் தாமே வந்தெய்துதலை யுணராநிற்பர். இந்நிலவுலகத்திலே அறநெறியின் முறைமையினை விளங்கும்படி நிலைநிறுத்தத் தோன்றிய இராம! |