பக்கம் எண் :

906தணிகைப் புராணம்

(வி - ம்.) உரைத்தன - உரைக்கப்பட்டனவாகிய. உஞற்றல் - செய்தல். தரை - நிலவுலகம். தழங்க - விளங்க. புரைத்தப : வலித்தல் விகாரம்.

(9)

 பூதியா முறைமையும் புகலக் கேட்டியால்
 கோதிலா மனுமுறைக் கொற்ற வேந்தனே
 பாதியாள் சத்திபத் தினியின் வைகுற
 ஏதிலா ணவந்தபு மிணையில் வேதியன்.

(இ - ள்.) இனி அத்தகைய திருநீறு உண்டாகும் முறைமையினையும் கூறக்கேள்! குற்றமில்லாத மனுதருமப்படி ஆள்கின்ற வெற்றியையுடைய வேந்தனே! தனதுடலில் பாதியை ஆளாநின்ற சத்திபத்தினியாக விருப்பத் தனக்கயலாகிய ஆணவமலம் அநாதியே இல்லையான ஒப்பற்ற அந்தணனாகிய சிவபெருமான்.

(வி - ம்.) பூதி - விபூதி. மனுமுறை - மனுதருமம். ஏதில் - அயலான. இணை - ஒப்பு. வேதியன் - வேதங்களை அருளியவன்.

(10)

 ஊழியே பாணிக ளுலப்பி லண்டமே
 கேழிலா மண்டபங் கேழ்த்த வேதிகை
 ஆழிசூழ் புவியவி யரிமெய் யாதியா
 வாழிமா மெய்மைவண் பசுக்க ளாவியா.

(இ - ள்.) ஊழிகளே! வேள்வி செய்தற்குரிய காலங்களாக, எண்ணில்லாத அண்டங்களே ஒப்பில்லாத வேள்வி மண்டபங்களாக, நிறமுடைய கடல்சூழ்ந்த நிலவுலகமே வேதிகையாகத் திருமால் முதலிய தேவர்கள் உடலங்களே அவியாக, பெரிய உண்மையும் வளப்பமுமுடைய உயிரினங்களே வேள்விப்புகையாகக்
கொண்டு.

(வி - ம்.) பாணிகள் - வேள்வி செய்தற்குரிய காலம் என்க. கேழ் - உவமை. கேழ்த்த - நிறமுடைய. வேதிகை - திண்ணை ; மேடை. வாழி - அசை. பசுக்கள் - உயிர்.

(11)

 நெற்றியங் குண்டத்து நெடித டங்கிய
 பொற்றநீள் விழியெரி புணர்த்து வேள்விசெய்
 தற்றமில் வேள்வியி லவிர்வெண் பூதியைப்
 பற்றற வுயிர்க்கெலாம் படிவத் தார்த்தினான்.

(இ - ள்.) தனது திருநெற்றியாகிய யாககுண்டத்தின் கண் நீண்டகாலம் அடங்கியிருந்த பொலிவுடைய நெடிய விழியாகிய நெருப்பினை மூட்டி வேள்வி செய்து சோர்வில்லாத அவ்வேள்வியின்கண் விளங்கிய (சாம்பரை) வெண்ணீற்றினை மன்னுயிர்க்கெலாம் அவற்றின் பற்றொழிதற் பொருட்டு அவையிற்றின் உடலிலே பூசியருளினன்.

(வி - ம்.) அம் - அழகிய. பொற்ற - பொலிவுடைய. அற்றம் - சோர்வு. படிவம் - உடலம்.

(12)