| பைத்திகழ் பொடியைத் தற்சனி கனிட்டை | | பாற்றுமூன் றினுஞ்சிந்தா தள்ளி | | மெய்த்தலை யணிதல் கனிட்டையங் குட்டம் | | விடுத்தவற் றிடுவது மாகும். |
(இ - ள்.) வத்திரம், புலித்தோல், மான்தோலாகிய இவற்றொன்றால் வாய் எட்டங்குலத்தளவு வட்டமாகவும் அத்தன்மைத்தாகிய எட்டங்குல மகலமாகவும் அவ்வளவை யிரண்டுகொண்ட துயரமாகவும் கொண்டு நன்றாகச் செய்யப்பெற்ற பையினிடத்து விளங்குகின்ற வெண்ணீற்றினை தற்சனி விரலும் கனிட்டை விரலும் நீங்கிய மூன்று விரல்களாலும் (கீழே) சிந்தாமல் உடலின்கண்ணே அணிக. கனிட்டையும், அங்குட்டமுமாகிய இவ்விரண்டு விரலைவிடுத்து ஏனைய, தற்சனி, மத்திமை, அநாமிகை என்னும் மூன்று விரல்களாலணிதல் செய்தலாகும். (வி - ம்.) தற்சனி - சுட்டுவிரல். கனிட்டை - சிறுவிரல். மத்திமை - நடுவிரல், அநாமிகை - பௌத்திரவிரல். (21) | ஒருவிர லொருகை யானிட லுத்தூ | | ளனஞ்செயா தணிதறெய் வந்தீக் | | குருபரன் வித்தை யெதிர்வழி வழுக்கள் | | கூரிட நீசர்முன் னணிதல் | | தரைமுக நோக்கி யணிதனின் றணித | | றருநர்பா லொருகையி னேற்றல் | | எரிநர குய்க்கு மிவைவிடல் சந்தி | | யில்லுழி நீரின்றிப் பூசல். |
(இ - ள்.) (நீற்றினை) ஒரு விரலாலும், ஒரு கையாலும், இடுதலும், உடல் முழுதும் பூசாது குழைத்தணிதலும், தெய்வத்தின் முன்னரும், தீ முன்னரும், ஆசாரியன் முன்னரும் கல்வி பயிலுமிடத்திலும், வழியிலும், குற்றமுள்ள விடத்திலும், கீழ்மக்கள் முன்னரும் அணிதலும், பூமியை நோக்கி யணிதலும், நின்றுகொண்டணிதலும், (நீற்றினைக்) கொடுப்பவரிடத்து ஒரு கையான் வாங்குதலும் ஆகிய இச்செயல்கள் வருத்தந்தரத்தக்க நரகத்தினிடத்துச் சேர்க்கும். இச்செயல்களை நீக்குவாய். சந்தியாகால மில்லாத காலத்து நீரில்லாமற் பூசுக என்க. (வி - ம்.) சந்தி செய்யுங்காலத்து நீரினாற்குழைத்தே அணிதல் வேண்டும் என்பார் "நீரின்றிப்பூசல்" என்றார். (22) | இனையவெண் பூதி தரித்தலோ டீச | | னின்னருள் புரிந்திடுங் கண்டி | | புனைமதி முகமொன் றாதியீ ரைந்தின் | | மேலும்பூண் டுள்ளன கோவை |
|