பக்கம் எண் :

914தணிகைப் புராணம்

 கடகமள விலநிரைத்த காமரயோத் திக்கிறைவன்
 கடவுண்மணி நீறணிந்து கருதுமனு வலகிட்டான்.

(இ - ள்.) கடலினையுண்ட அரிய தவத்தையுடைய அகத்திய முனிவர் கருணை நிறைந்து இனிமையாக அருளிச்செய்த திருப்பாற்கடலின் கட்டோன்றிய அமிழ்தினையொத்த அருளினை மேற்கொண்டு பிரியா விடைபெற்றுக் கடகமென்னு மளவினையுடைய யானைப்படைகள் அளவில்லனவாக நிறையப்பெற்ற (கண்டார்க்கு) விருப்பம் வருதற்கேதுவாகிய அயோத்தியென்னும் நகரினுக்கரசனாகிய இராமன் தெய்வத்தன்மையையுடைய மணியினையும், வெண்ணீற்றினையும் (விதிப்படி) அணிந்து (யாவராலும்) எண்ணத்தக்க (முத்தி பஞ்சாக்கர) மந்திரத்தை அலகிட்டுக் கூறினானென்க.

(வி - ம்.) கடகம் - பன்னிரண்டு யானைகொண்ட ஓரளவு. அலகிடல் - கணக்கிடல்.

(27)

 நித்தலுமைந் தெழுத்திலக்க நிரம்பவல கிடமுக்கண்
 அத்தனெதி ரெழுந்தருளி யவாவியதென் னுரையென்னப்
 பொத்தியவன் புளத்தோடும் பூங்கமலத் தாள்வணங்கி
 நித்தியநின் மலவனக நிரிகவெனத் துதித்துரைப்பான்.

(இ - ள்.) நாடொறும் (முத்தி) பஞ்சாக்கரத்தினை இலக்கமென்னும் எண்ணளவு முற்றக் கணக்கிட முக்கண்ணினையுடைய (ஆன்மாக்களுக்குத்) தந்தையாகிய இறைவன் (இராமனுக்கு முன்னர்) எழுந்தருளி நீ விரும்பியது யாது சொல்வாயாக வென்று திருவாய்மலர்ந்தருள (இராமன்) அன்பு பொதிந்த வுள்ளத்தோடு தாமரை மலர் போன்ற இறைவன் றிருவடிகளை வணங்கி என்றுமுள்ளவனே! இயல்பாக மலம் நீங்கப்பெற்றவனே, ஆசையற்றவனே எனக் கூறித் துதி செய்து
கூறுவானென்க.

(வி - ம்.) பொத்திய - பொதிந்த. நிரிக - ஆசையற்றவனே.

(28)

 சானகியைக் கவர்ந்தரக்கன் றடங்கடல்சூ ழிலங்கையினான்
 ஆனவனைச் சேனையொடு மடர்த்தவளைக் கொடுநாயேன்
 ஈனடைய வரமருள்வ தென்றுமறு வலுந்தாழ்ந்தான்
 ஊனருள வெழுந்தருளு முமைபாகர் முறுவலித்து.

(இ - ள்.) சனகன் புத்திரியாகிய சானகி யென்பவளை எடுத்துக் கொடுபோய் இராவணன் பெருமையுடைய கடல்சூழ்ந்த இலங்கையின் கண்ணுள்ளான். அவ்விடத்து அவ்விராவணனைச் சேனையொடுங் கொன்று அச்சீதையைக் கைப்பற்றி நாயினுங் கடையேனாகிய யான் இவணடைதற்கு வரத்தினை யருள் செய்வாயென்று மறுபடியும் வணங்கினான். அவண் அருள் செய்ய எழுந்தருளியுள்ள உமையம்மையினை யிடப்பாகத்திலுடைய இறைவர் புன்சிரிப்புச் செய்தென்க.

(வி - ம்.) ஆன், ஈன், ஊன், மூன்றும் இடப்பொருளுணர்த்தி நின்றன. அரக்கன் - இராவணன். மறுவலும் - மீண்டும்.

(29)