| பக்குவமில் லார்க்குண்மைப் பரஞான மெவ்வுருவால் | | எக்கருணை யாலியைய வியைத்தாலுங் கொள்ளாமை | | மைக்கடல்சூ "லகமெலா மதித்தறியத் தெரிப்பார்போல் | | அக்கணொரு திருவிளையாட் டானருளிச் செய்கின்றார். |
(இ - ள்.) (சத்திநி பரதத்தவராகிய பக்குவிகளுக்கல்லாமல் ஏனைய) அபக்குவிகளுக்கு மேலாகிய உண்மைஞானத்தை எவ்வடிவாலும், எவ்விதமாகிய கருணையோடும் பொருந்தச் செவியறிவுறுத்தாலும் மனத்திலேற்றுக் கொள்ளாமையை கரியகடலாற் சூழப்பெற்ற உலகங்களெல்லாம் மதித்து அறியும் வண்ணம் தெரிவிப்பவரைப்போல அவ்விடத் தொப்பற்ற திருவிளையாட்டான் திருவாய்மலர்ந்தருள்கின்றார் என்க. (வி - ம்.) இயைய - இயைத்தாலும் என்க. அங்கனென்பது - அக்கனென எதுகை நோக்கி வலித்தல் விகாரம் பெற்றது. (30) | மாரவேள் கணையலைத்தோர் வழியறியா ரதுபோல | | வீரமார் தருமானம் விழுங்கப்பட் டுஞற்றறனுக் | | கேலும்வான் பயனிரவா திழிந்தபய னிரந்தனையால் | | கோலமார் சிவஞானங் கொடுக்கின்றா மதனாலே. |
(இ - ள்.) மன்மதன் கணையால் அலைப்புண்டோர் சன்மார்க்க நெறியினை யறியமாட்டார். அஃதேபோல் வீரம் பொருந்திய மானத்தால் விழுங்கப்பட்டு வருத்தப்படுதல் உடம்பினுக்குப் பொருந்தும். மேலாகிய வீட்டினை விரும்பாது கீழான பயனை (என்மாட்டு) இரத்தல் செய்தனை. ஆதலால் மேன்மை பொருந்திய சிவஞானத்தை (நாம்) தருகின்றோம். அச்சிவஞானத்தால். (வி - ம்.) செய்யாநின்ற அறத்திற்குப் பொருந்தும் வான்பயன் இரவாது என்னலே சிறப்பு. (31) | உலகமெலாந் தொழிற்படுத்து மோங்கொளியா கியவெமையும் | | உலகமெலா மவாவுயிரை யுற்றொழியா மலவிருளும் | | உலகமெலா மதுவதுவா யுற்றறிந்து மலப்பிணியால் | | உலகிறந்த வெமையறியா வுயிரெனுநின் னையுமறியாய். |
(இ - ள்.) உலகம் யாவையும் (ஆக்கல், காத்தல், அழித்தலாகிய) தொழிலின்கட் பொருந்தச் செய்யும் உயர்ந்த வொளிவடிவாகிய வெமையும், உலகம் யாவையும் விரும்புகின்ற உயிர்கண்மாட்டுப் பொருந்தி நீங்காத ஆணவமலமாகிய இருளினையும், உலகம் யாவையும் அதனதன் வண்ணமாய் நின்று அறிதலைச் செய்து அவ்வுலக நிலையினைக் கடந்து நின்ற எம்மை அறியமாட்டாத உயிராகிய நின்னையும் அறியாய் என்க. (32) | தேயமிடம் பொருள்போலத் தீராமை யுடங்கியைந்த | | மாயவுடல் வேறாமேன் மங்கையுயிர்க் கெவனாவள் |
|