| வழும்புதடி குடரென்பு வார்நரம்பு மேதை நெய்த்தோர் | | தழும்புழுக்கண் மூளைமயிர் சருமமா திகள்குழுமும் | | கொழும்பொதியைப் பகுத்திடுங்காற் கோற்றொடியா ளெவள் காட்டாய் | | விழும்பிணத்தெவ் வுறுப்பில்லை விழையாமை விடல்கிளவாய். |
(இ - ள்.) வழும்பும், தடியும், குடரும், என்பும், நரம்பும், மேதையும், செந்நீரும் இவைகளைத் தழுவியிருக்கும், புழுக்களும், மூளையும், மயிரும், தோல் முதலியவைகள் சேர்ந்திருக்கும் கொழுவிய மூட்டையை (ஒவ்வொன்றாகப்) பிரிக்குங்காலத்துத் திரண்டவளையல் அணிந்த சானகி யென்பாள் எத்தன்மையுடையாள்; நீ காட்டுவாயாக. கீழே விழுந்த பிணத்தின்கண் எல்லாவுறுப்புக்களும் உள்ளன. (அங்ஙனமிருக்கவும்) அப்பிணத்தின்கண் விருப்பஞ் செல்லாமைக்குக் காரணங் கூறுவா யென்க. (வி - ம்.) வழும்பு - மாமிச விசேடம். தழும்புழுக்கள் - தழுவும் புழுக்கள். கொழும்பொதி - கொழுவிய மூட்டை. (36) | என்றுமோ ரியல்பினதா யென்றுமா னந்தமாய் | | என்றுமா ருயிர்க்கிரங்கி யிடர்முழுதுந் துமிப்பதாய் | | என்றுநீங் குவதின்றி யென்றுமருந் துணையாகி | | என்றுமோங் கெமதருளே யெய்திவாய்ந் திருவென்றார். |
(இ - ள்.) எக்காலத்தும் ஒரு தன்மையை யுடையவாகி எக்காலத்தும் இன்பவடிவமாய், எக்காலத்தும் அரிய உயிர்களுக் கிரக்கமுற்று (அவ்வுயிர்களுக்குளவாகிய) துன்பங்களை நீக்குவதாய் எக்காலத்தும் ஆன்மாக்களைவிட்டு நீங்குவதன்றி (அவ்வான்மாக்களுக்கு) அரிய (தோன்றாத்) துணையாகி என்றும் உயர்ச்சிபெற்ற எம்முடைய அருளையடைந்து வாழ்ந்திருப்பாய் என்றார் என்க. (வி - ம்.) துமிப்பது - கெடுப்பது. (37) | அருள்புரிதல் கேட்டலொடு மயோத்தியா னருண்மறுப்ப | | வெருவியநெஞ் சினனாகி வீழ்ந்துபல முறைமொழிவான் | | இருவினையே னென்செய்கே னிராக்கதர்செய் கையுஞ்சீதை | | உருவுநினை தொறும்வெகுளி காமமுமோங் குவவென்றான். |
(இ - ள்.) (இங்ஙனம் இறைவன்) அருள் செய்தலைக் கேட்டலோடு அயோத்தி நகரத்தரசனாகிய இராமன் (இறைவனருளினை) மறுத்தற்குப் பயமுற்ற மனமுடையவனாகிக் கீழே பலமுறை வணங்கிச் சொல்லத் தொடங்குவான். நல்வினை தீவினையாகிய இருவினையு முடையேனாகிய யான் என் செய்கேன். இராக்கதர் செயலினையும், சீதையின் வடிவழகையும் நினையுந்தோறும் வெகுளி காமமென்னும் இருகுணங்களும் மேன்மேலும் ஓங்குவன என்றான் என்க. (வி - ம்.) இராக்கதர் செய்கை நினையுந்தொறும் வெகுளியும், சீதையுருவு நினையுந்தொறும் காமமும் ஓங்குவ என்க. (38) |