| பெருங்கருணை யொடுநகைத்துப் பேதுறே லெனத்தேற்றி | | அருங்கதவீ ரமும்படையு மளித்தருளி யிடந்துடியின் | | மருங்குலுமை யாட்கருளும் வானவர்நா யகர்மறைய | | ஒருங்குபகை துமித்தான்போன் றுவகையனாய்ப் பணிந்தன்னான். |
(இ - ள்.) (இறைவன் இராமனை நோக்கி) பெரிய கருணையோடு நகைசெய்து (நீ) வருந்தலெனத் தெளிவித்து அரிய சிறப்பினையுடைய வீரமும் படைக்கலங்களும் அளித்தல் செய்து இடப்பாகத்தைத் துடிபோன்ற இடையினையுடைய உமையம்மையாருக்கருளிய தேவர்கள் தலைவனாகிய இறைவன் மறையாநிற்க ஒரு சேரப் பகைவர்களைக் கெடுத்தவனைப்போன்று உவகையையுடையவனாய் வணங்குதல் செய்து அவ்விராமன். (வி - ம்.) வேண்டுவார் வேண்டுவன அளித்தல் தன்னியல்பாகலின் வீர முதலியவற்றை அளித்தனன் என்றவாறு. (39) | இலங்கைபுகுந் தரக்கருயி ரிருவிசும்பிற் குடியேற்றி | | அலங்கனறுங் குழன்மாதோ டணியிரா மேச்சுரத்து | | நலங்கிளருஞ் சிவலிங்க நயந்திருத்திப் பூசித்துச் | | சலங்கெழுபா தகத்தொடக்குத் தணந்தமரு மந்நாளில். |
(இ - ள்.) இலங்கா நகரத்தின்கட்புகுந்து இராக்கதர் உயிர்களைப் பெரிய வீரசுவர்க்கத்தின்கட் குடியேறச் செய்து நல்ல மாலையை யணிந்த குழலோடுகூடிய சானகியாகிய பெண்ணினுடன் அழகிய இராமேச்சுரத்து எல்லா நன்மையும் விளங்குகின்ற சிவலிங்கப் பெருமானை விரும்பி எழுந்தருளச் செய்து அர்ச்சனை செய்து துன்பம் பொருந்திய பாதகமாகிய சம்பந்தங்கள் நீங்கித் தங்கியிருக்கின்ற அக்காலத்தின்கண். (வி - ம்.) சலம் - துன்பம். தொடக்கு - சம்பந்தம். தணத்தல் - நீங்கல். (40) | முந்திறைவ னருண்ஞான மோகத்தா லிழப்புண்ட | | வந்தவினை நினைந்துநினைந் தயர்கின்றா னதுபெறுவான் | | சிந்தையிற்சே வடிநினைந்து தியானித்தா னாங்கெதிரே | | வந்தருளிக் கூத்தனார் மற்றவனுக் கருள்புரிவார். |
(இ - ள்.) முன்னர் இறைவன் அருளிச்செய்த ஞானத்தை மோகங் காரணமாக இழத்தலைச் செய்த அந்தச் செயலினை நினைத்து நினைத்து அயர்தலைச்செய்கின்ற இராமன் அந்த ஞானத்தினையடையும் பொருட்டு மனத்தின்கண் இறைவன்றிருவடியை நினைத்துத் தியானஞ் செய்தனன். அப்பொழுது எதிரே திருக்கூத்தினையுடையவராகிய சிவபெருமான் எழுந்தருளி அவ்விராமனுக்கு அருள் செய்வாரென்க. (வி - ம்.) இறைவன் - பரமசிவன். வினை - கொலை முதலிய தீவினை. பெறுவான் - பெறுதற்கு. கூத்தனார் - சிவபெருமான். (41) |