| உள்ளமடங் கியதில்லை யுள்ளமடங் குறினல்லால் | | தெள்ளரிய சிவஞானஞ் சிவணாது செருத்தணியை | | நள்ளுவையே லுளமடங்கு ஞானமுமெய் துவையென்றார் | | துள்ளுமுள மகிழ்சிறப்பத் துதித்திறைஞ்சி விடைகொண்டான். |
(இ - ள்.) (இராமா உனக்கு) மனமானது அடக்கமுறவில்லை. உள்ளமானது அடங்குதலுறினல்லது தெளிதற்கரிய சிவனையறியும் அறிவு உனக்கு வராது. (ஆதலால் அது சிவணும் பொருட்டு) செருத்தணியென்னும் திருப்பதியை நீ அடைவாயானால் மனமடங்குதற் கேதுவாகிய அறிவை நீ அடைவாய் என்று திருவாய்மலர்ந்தருளினார். மகிழ்ச்சி காரணமாகத் துளும்புகின்ற உளமானது சிறப்படைய தோத்திரஞ் செய்து வணங்கிப் பிரியா விடைபெற்றனனென்க. (வி - ம்.) தெள் - தெளிதல். சிவணாது - பொருந்தாது. நள்ளுதல் - அடைதல். (42) | நெடிபடுகா னமும்பதியு நெடுநெறியா னீந்திப்போய் | | வடியயில்வேல் வலத்துயர்த்த வள்ளல்செருத் தணியண்மிக் | | கடிகெழுதீர்த் தம்படிந்து காமர்வரை வலஞ்செய்து | | முடியிவர்ந்து பணிந்துள்ளான் முறையாற்புக் கெனத்தொழுதான். |
(இ - ள்.) சிள்வீடு ஒலிக்கின்ற கானங்களையும், ஊர்களையும் நீண்ட வழியானே கடந்து சென்று மிகக் கூர்மை பொருந்திய வேற்படையை (வெற்றிக் கறிகுறியாக) வலப்பக்கத்துயர்த்த வள்ளற்றன்மையையுடைய முருகன் செருத்தணி யென்னும் பதியை யண்மி நறுமணம் பொருந்திய தீர்த்தத்தினை வணங்குதல் செய்து யாவரும் விரும்பத்தக்க தணிகைமலையை வலம்வந்து (அம்மலையின்) முடியின்கண்ணே ஏறுதல் செய்து வணங்கி (இறைவன் எழுந்தருளியுள்ள திருக்கோவில்) உள்ளே முறையோடு புகுந்து தொழுதனன் என்க. (வி - ம்.) நெடி - சிள்வீடென்னும் வண்டு. புக்கென - புக்கு, எச்சத்திரிபு. (43) | அன்றொழிய வழிநாளா லலைநதிபுக் கினிதாடித் | | தொன்றிறைவற் கருள்புரிந்த சூழலிருந் தனனோற்றான் | | மன்றல்கமழ் கடம்பணிந்த வரைமார்ப னெதிர்தோன்றி | | நன்றருளுஞ் சிவஞான நயந்தேற்றுப் பதிபுக்கான். |
(இ - ள்.) அற்றைநா ளம்மலையின்கட் கழிய மறுநாளின்கண் அலையோடு கூடிய நதியின்கண்ணே சென்று இனிமையாக நீராடி முற்காலத்துச் சிவபெருமானுக்கு முருகன் செவியறிவுறுத்திய இடத்தின்கண்ணே தங்கித் தவஞ்செய்தனன். வாசனை வீசுகின்ற கடப்பந்தாரினை யணிந்த வரை போன்ற மார்பினையுடைய இறைவனாகிய முருகன் (இராமனுக்கு) எதிரே எழுந்தருளிப் பெரிதும் அருளிச்செய்த சிவஞானத்தினை (இராமன்) விரும்பி ஏற்றுத் தன் பதியாகிய அயோத்திக்குச் சென்றானென்க. |