திருநகரப் படலம் | திருவி ளங்கிய வனப்பினி லறிவினிற் | | றிறத்தினி லருடன்னில் | | ஒருவர் தங்களை யுயர்த்தமுன் முருகனை | | யுவமையாக் குவரன்னான் | | பொருவில் வள்ளியொ டாடிட மாகிய | | புகழ்த்தணி கையும்யாங்கும் | | ஒருந கர்க்கணி யுயர்த்தமுன் னுவமையா | | வுரைப்பதா லெவராலும். |
(இ - ள்.) செல்வத்தானும், விளங்குதலைச் செய்கின்ற அழகினாலும், வலியினானும், அருளினானும், (உலகத்திலுள்ள) ஒரு தலைவரை உயர்த்திச் சொல்ல முதலாக முருகப் பெருமானை உவமப் பொருளாக்கிக் கூறுவார்கள் அறிவுடையோர்கள். அத்தகைய முருகப் பெருமான் (அழகிற் றனக் குயர்வொப்பில்லாத) வள்ளி நாயகியாரோடு கூடு மிடமாகிய தணிகை யென்னும் நகரமும் எப்பொழுதும் ஒரு நகரத்தினை அழகால் உயர்த்திச் சொல்ல முதலில் எல்லாப் புலவர் பெருமக்களானும் உவமப் பொருளாக உரைக்கப்படுவதா மென்க. (வி - ம்.) திரு - செல்வம். திறம் - வலி. முன் - முதல். ஆடிடம் - கூடுமிடம்; விளையாடு மிடம். உயர்த்த - உயர்த்திச் சொல்ல. எவராலு முரைக்கப்படுவ தெனக் கூட்டுக. ஒரு நகர்க்கு - வேற்றுமை மயக்கம். (1) | ஓங்கு பன்மறை யாதியின் முதலெழுத் | | துறுபொரு ளுணர்கல்லாத் | | தீங்கு தேர்ந்துவன் சிறையிடப் பட்டவன் | | சிருட்டியி லுளதாயின் | | பூங்கள் வார்குழல் வள்ளியொ டாடுதல் | | புகன்றிடா னதனான்முற் | | றாங்கி வையகம் படைப்புழி யறுமுகன் | | றான்படைத் தஃதொன்றே. |
(இ - ள்.) உயர்ந்த பலவாகிய வேத முதலிய கலைகளின் முதலெழுத்தாகிய பிரணவத்தின் கண்ணுற்ற பொருளை யறியு (மதுகை) யில்லாத குற்றத்தை யாராய்ந்து வலிய சிறையி லிடப்பட்டவனாகிய நான்முகன் படைப்பில் (இத் தணிகை) யுளதாமாயின் பூக்களிலுள்ள தேனொழுகுகின்ற கூந்தலோடு கூடிய வள்ளியம்மையாரோடு கூடுதலை விரும்பான். ஆதலால் அறுமுகக் கடவுள் (பிரமனைச் சிறையி லிட்டுப் படைக்குந் தொழிலை) முதன்மையாக மேற்கொண்டு உலகத்தை யுளவாக்குங் காலத்துத் தன்னாலாக்கப்பட்டது அத் தணிகை யொன்றேயாம். |