பக்கம் எண் :

களவுப் படலம்921

களவுப் படலம்

 செந்திரு மணந்த கேள்வ னுயிர்த்தரு டெய்வக் கற்பின்
 சுந்தரி யமுத வல்லி யென்பவர் சுடர்வேற் செங்கை
 மைந்தனை மணப்ப வுன்னி மலர்விரி சரவ ணத்து
 முந்தருந் தவங்க ளாற்ற முருகனாங் கண்மிக் கூறும்

(இ - ள்.) (செம்மையாகிய தாமரை மலரில் இருக்கின்ற) செந்திருவாகிய மகளைக்கூடிய தலைவனாகிய விண்டுவானவன் பெற்றருளிய தெய்வத்தன்மை பொருந்திய கற்பினையுடைய சுந்தரியென்பவளும் அமுதவல்லி யென்பவளும் ஒளிபொருந்திய வேற்படையைச் சிவந்த கையின்கட்டாங்கிய வலிமையுடையானாகிய குமாரப்பெருமானை மணக்க நினைத்து (தாமரை) மலர்கள் விரிந்துள்ள சரவணப் பொய்கையினிடத்து முன்னர் அரிய தவங்களைச் செய்ய முருகப்பெருமான் அவ்விடத்துப் பொருந்திக் கூறுவானென்க.

(வி - ம்.) திருமணந்த கேள்வன் - திருமால். வேற்செங்கை மைந்தன் - முருகன். உன்னி - நினைத்து. அண்மி - அணுகி.

(1)

 இந்திரன் பாங்க ரண்மி யிருமதி யமுத வல்லி
 சுந்தரி புவியின் மாட்டுத் துகளறு முனிபாற் றோன்றி
 வெந்திறல் வேடர் சார்பில் விளங்குதி கருத்து முற்றப்
 பிந்துற வரைதுஞ் சென்மி னென்றனன் பெயர்ந்து போந்தான்.

(இ - ள்.) அமுதவல்லியே (நீ) இந்திரன் பக்கத்துப் பொருந்தி இருப்பாயாக. சுந்தரியே (நீ) பூமியினிடத்து மும்மலக்குற்றங்கள் நீங்கிய சிவமுனிவன்பாற்றோன்றி வெவ்விய வலியையுடைய வேடர் மரபில் விளக்கமுறுவாய். (நின்) எண்ணம் நிறைவுறப் பின்னர் (நாம்) வரைந்துகொள்வோம். (நீங்கள்) செல்வீர்களாகவென்று அவணின்றும் நீங்கினனென்க.

(வி - ம்.) மதி - முன்னிலையசை. முனி - சிவமுனிவர். பிந்துற -
பின்னர்.

(2)

 அன்னண மமுத வல்லி யமரர்கோன் பாங்க ரண்மி
 மன்னுநாற் கோட்டு வேழம் வளர்த்திடத் தெய்வ யானை
 என்னுமப் பெயரின் வைகி யெம்பிரான் பரங்குன் றத்து
 முன்னினன் வதுவை யாற்றத் தவப்பயன் முற்றி நின்றாள்.

(இ - ள்.) (இறைவன் திருவாய் மலர்ந்தருளிய) அவ்வண்ணமே அமுதவல்லி யென்பவள் தேவர்கடலைவனாகிய இந்திரனிடத்துப் பொருந்தி நான்கு கொம்புகள் பொருந்திய அயிராவதம் என்னும் யானை வளர்க்கத் தெய்வயானை யென்னும் பெயருடன் வளர்ந்து எமது தலைவனாகிய முருகப்பெருமான் திருப்பரங்குன்ற மென்னும் பதியில் மணவினை செய்யத் தவப்பயனையடைந்து
நின்றாளென்க.