(வி - ம்.) அன்னணம் - அவ்வண்ணமே. நாற்கோட்டுவேழம் - ஐராவதம். எம்பிரான் - முருகன். வதுவை - திருமணம். (3) | துளங்கெரி வளர்த்து மூழ்கிச் சுந்தரி வடிவு நீக்கி | | விளங்குசூக் குமதே கத்தின் மேதகு தொண்டை நாட்டில் | | வளங்கொண்மேற் பாடி மாட்டு வளர்வரைச் சார லண்மி | | உளங்கொளு மன்பு பொங்க வுயர்தவ மாற்றா நின்றாள். |
(இ - ள்.) அசைகின்ற அழலினை வளர்த்துச் சுந்தரியானவள் அவ் வழலின்கண் மூழ்கி உடல் நீங்கப்பெற்று விளக்க முறுகின்ற சூக்கும தேகத்துடன் மேன்மை பொருந்திய தொண்டை நாட்டின்கண் பல வளங்களையும் தன்னிடத்துக்கொண்ட மேற்பாடி நாட்டில் வளர்கின்ற மலைப்பக்கத்தையண்மி உள்ளத்தின்கண்ணே யன்புமிக உயர்ந்த தவத்தைச் செய்து நின்றாளென்க. (வி - ம்.) நாடு - மேற்பாடி நாடு. வெற்பு - வள்ளிமலை. (4) | ஆவயின் முன்பே வைகி யருந்தவ மாற்றா நின்றோன் | | தேவரும் வியக்குஞ் சீர்த்திச் சிவமுனி யென்பா னாங்கோர் | | தாவுமான் பிணையொன் றண்மத் தகையெழி னோக்கிக் கண்ணால் | | மேவருங் கலவி துய்த்தா னத்தகு வேலை தன்னில். |
(இ - ள்.) அவ்விடத்து முன்னரே தங்கி அரியதவத்தினைச் செய்யா நின்றவனாகிய தேவர்களும் வியவா நின்ற சீர்த்தியினையுடைய சிவமுனி யென்பவன் அவ்விடத்துத் தாவிச்செல்கின்ற பெண்மானொன்று தன்பக் கலணுக (அம்மானின்) தகுதிபொருந்திய அழகைக் கண்டு கண்ணினால் பொருந்துகின்ற கலவியின்பினை நுகர்ந்தனன். அத்தகுதியான காலத்திலென்க. (வி - ம்.) வயின் - இடம். சீர்த்தி - மிகுபுகழ். அண்ம - அணுக. தகை - தகுதி. எழில் - அழகு. வேலை - பொழுது. (5) | கருவென வகட்டி னுற்றாள் காமரு பிணைமான் சென்று | | பெருகிய வருத்தந் துன்னப் பீளுறு மகவை வேடர் | | உருகெழு வள்ளி கெண்டி யுற்றிடும் பயம்பி லுய்த்து | | மருமலி கானம் புக்கு மறைந்தது வேடர் கோமான். |
(இ - ள்.) (சுந்தரியானவள்) கருவாக (அம்மானின்) வயிற்றிற் சூட்சும தேகத்துடன் புகுந்தனள். யாவரும் விரும்பத்தக்க அப்பெண்மான் சென்று மேன்மேல் வருத்தமிகக் கருப்பமாகப் பொருந்திய மகவினை நிறம்பொருந்திய வள்ளிக்கிழங்கைத் தோண்டியெடுத்தலால் உளவாகிய பள்ளத்தின்கண்ணே ஈன்று வாசனைமிக்க கானத்தின் கண்ணே புகுந்து மறைந்தது, வேடர்களுக்குத் தலைவனாகிய வரசன். (வி - ம்.) பீள் - கரு. அகடு - வயிறு. கெண்டி - தோண்டி. பயம்பு - பள்ளம். (6) |