பக்கம் எண் :

924தணிகைப் புராணம்

 தனைநிகர் மாதர் பாங்கர்ச் சார்தர வேகி நீலச்
 சுனைகுடைந் தாடிச் சோலைத் தூமலர் குற்றுப் பந்தும்
 புனைமணிக் கழங்கு மற்று மூசலும் புணர்ந்து நோக்கித்
 தினையினிக் காத்தி யென்னத் தீம்புனங் காவல் கொண்டாள்.

(இ - ள்.) தன்னை யொத்த மாதர்கள் பக்கலிற் சென்று நீலமலர் களையுடைய சுனையின்கண்ணே மூழ்கி நீராடிச் சோலையின்கண்ணுள்ள நறுமலர்களைப் பறித்துப் பந்தும், அலங்கரிக்கப்பெற்ற அழகிய கழங்கும், மற்றைய ஊசலாடல் முதலிய செயல்களினும் (வள்ளிநாயகியார்) சேர (அம்மையார் செயலைத் தாய் தந்தையர்) பார்த்து இனி, தினைப்புனத்தைக் காவல் செய்வாயெனக் கூற (அவர்களாணையின் வண்ணம்) இனிய தினைப்புனத்தைக் காவல் கொண்டனளென்க.

(வி - ம்.) குற்று - பறித்து. புணர்ந்து : எச்சத்திரிபு, புணர அஃதாவது விளையாடல் செய்தலென்க.

(10)

 இதண்மிசை யிவர்ந்து தட்டை யெறிநெடுங் கவணை கொண்டு
 புதன்மறைந் தடுக்குங் கிள்ளை பொறிமயில் புறவு மற்றும்
 கதிர்படு புனத்தி னீங்கக் கருதியா லோல மென்னச்
 சுதைநிகர் மொழியா ளோப்பிச் சூழ்ந்தன ளிருக்குங் காலை.

(இ - ள்.) பரணின் மீதேறி (கிளிகடி கருவியின் வகையாகிய) தட்டையினையும், (நடுவிடத்திற் கல் முதலியவற்றை வைத்து) எறிதலைச் செய்கின்ற நீண்ட கவணையும், கைக்கொண்டு, புதல்களிலே மறைந்திருந்து பொருந்துகின்ற கிள்ளையும், புள்ளிகளையுடைய மயிலும், புறாக்களும், ஏனைய பறவைகளும் கதிர்கள் பொருந்திய புனத்தின் கணின்றும் நீங்க நினைத்து அமிழ்தனைய மொழியினையுடைய வள்ளி நாயகியார் ஆலோலமென்று கூறி (கதிர்கவரும் பறவைகளை) ஓட்டி (தினைப்புனத்தை)ச் சுற்றினவளாய் இருக்கின்ற காலத்தென்க.

(வி - ம்.) இதண் - பரண். தட்டை, கவண் - கிளிகடி கருவிகள். ஆலோலம் - புள்ளினையோச்சும் ஓசை. ஓப்பும் - ஓட்டும்.

(11)

 மகதியாழ் முனிவன் வேற்கை வள்ளலை வழிபா டாற்றத்
 தகவுறுந் தணிகை யோங்கல் சார்பவன் கண்டு தாழ்ந்து
 பகரரு வளமை சான்ற பாவையை மணக்கும் வண்ணம்
 புகலுது மென்று வல்லே போந்தனன் றணிகை வெற்பு.

(இ - ள்.) மகதியென்னும் யாழினையுடைய முனிவனாகிய நாரதன் வேற்படையினைக் கையின்கட்கொண்ட வள்ளலாகிய முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்யத் தகுதியுற்ற தணிகை மலைக்குச் செல்பவன் (வள்ளி நாயகியாரை வழியிற்) பார்த்து (முருகனைத்) தாழ்ந்து சொலற்கரிய வளங்கள் நிறைந்த பதுமை போல்பவளாகிய வள்ளிநாயகியாரை மணஞ்செய்யும் வண்ணம் சொல்வோம் என்று தணிகை மலையினுக்கு விரைவாகச் சென்றனனென்க.