பக்கம் எண் :

928தணிகைப் புராணம்

 மயின டாவுநின் வண்மைம கிழ்ந்தென
 மயில்க ளாடுவ மாங்குயி லுந்தம
 தியலு ருக்கொ ளிறையுமவ் வூர்தியாய்ப்
 பயில்வு தேர்ந்தெனப் பாடெழுந் தார்ப்பன.

(இ - ள்.) மயிலாகிய (ஊர்தியினைக்) கடாவுகின்ற அடிகளின் வள்ளற்றன்மையை மகிழ்ந்து எங்கும் மயிற்குலங்களாடுவன. மாஞ் சோலையின் கண்ணுள்ள குயிற்குலங்களும் தங்கள் இலக்கணமமைந்த வடிவினை (தக்கன் யாகத்திலே) கொண்ட இறைவனாகிய இந்திரனும் அம்மயில்வாகனமாக (நின்னைத்தாங்கப்) பழகியதை யறிந்து பக்கத்தே எழுந்து (உவகையின் ஒலிப்பன வென்க.)

(வி - ம்.) மகிழ்ந்தென, தேர்ந்தென என்பன எச்சத்திரிபு, அமரர் தலைவனும் அடிகட்கு மயில்வாகனமாகப் போந்தா னென்பது தோன்ற "இயலுருக் கொளிறையு மவ்வூர்தியாகப் பயில்வு தேர்ந்தென" என்றார்.

(23)

 ஆடு வேல்வல னேந்தி யடுத்திடும்
 வாடு றாமது நீபம லர்த்தொடை
 கூடு வாங்குடை வாமெனு மோகையால்
 ஓடு மீளு முலாவும ளிக்குலம்.

(இ - ள்.) (சென்ற போர்தோறும்) வெற்றியை யளிக்கின்ற வேற் படையை (அவ்வென்றிக் கறிகுறியாக) வலப்பக்கத்துத் தாங்கிய அடிகளே! (நின் மார்பினைப்) பொருந்திய வாடுதலமையாத தேனையுடைய கடப்பந்தாரினிடத்துச் சுழலுதல் செய்யும் வண்டின் கூட்டங்கள் சேர்வாம், மூக்கினாற் கிண்டுவாம் என்னும் உவகையின் ஓடுமீளு மென்க.

(வி - ம்.) ஆடு - வெற்றி. வலனேந்தி : அண்மைவிளி. குடைதல் - மூக்காற் கிண்டுதல். அடுத்திடும் - நின்மார்பிற் பொருந்திடும்.

(24)

 யானை மாமுகத் தேந்தற் கிளையவன்
 யானை யைக்கடி தொட்டவ னீங்கொரு
 மானு யிர்த்த மகட்குறு மென்றுபன்
 மானி னங்களு மோகைம லிந்தன.

(இ - ள்.) உயர்ந்த யானை முகத்தினையுடைய தலைவனாகிய மூத்த பிள்ளையார்க்கு (பின்னர்த் தோன்றிய) இளைய பிள்ளையும் (அமுதவல்லி யாகிய) யானையினை மணந்த காரணமாகத் தொடுதல் செய்தவனுமாகிய முருகப்பெருமான் இவ்விடத்து ஒப்பற்ற மானீன்றருளிய மகளாகிய வள்ளி நாயகியாருக்கும் நாயகனாகப் பொருந்துவானென்று பலமான் கூட்டங்களும் உவகை மலிந்தன
வென்க.

(வி - ம்.) யானையால் வளர்க்கப்பட்டமையால் அம்மையாரை "யானை" எனவே உபசரித்துக் கூறினார்.

(25)