பக்கம் எண் :

களவுப் படலம்929

 நம்மி னத்தொரு மாவைந லிந்தவன்
 நம்மி டத்தினு மன்புந டாத்துமச்
 செம்மை நாம்பெறுஞ் செவ்விய தாமெனக்
 கொம்மை மென்றளிர் கூர்ந்தன கொக்கினம்.

(இ - ள்.) நமது சாதியின்கண்ணுள்ள ஒப்பற்ற சூரனாகிய மாமரத்தினை வெட்டுதல் செய்தவன் நம்மாட்டும் அன்பினைச் செலுத்தினுஞ் செலுத்துவன். அச்செம்மையினை நாமடையுங்காலம் அஃது இக் காலமாகும். (நாம் கருதியது கருதியவாறு) ஆகுமென்று சொல்லும் வண்ணம் மிக மெல்லியதளிர்கள் மிகுந்துள்ளன மாவினத்திலென்க.

(வி - ம்.) நலிதல் - ஈண்டு வெட்டுதல். செவ்வி - காலம். கொம்மை - மென்மை.

(26)

 மதுவை மாட்டிய வானவ னேமியைப்
 புதல்வி யைப்புறந் தந்திடத் தூண்டலும்
 கதுவி யெண்ணிலு ருக்கொடு காத்தெனத்
 ததைவ தேத்தடை தண்வரைப் பாலெலாம்.

(இ - ள்.) மதுவென்னும் அசுரனை வருத்திய தேவனாகிய விண்டு சக்கரப்படையினைத் தன் மகளாகிய வள்ளி நாயகியாரைப் புரந்திடச் செலுத்த (அச்சக்கரப்படை) பொருந்தி அளவில்லனவாகிய வடிவு கொடு காவல் செய்ததென்று சொல்லும் வண்ணம் குளிர்ந்தவரை யிடங்களிலெல்லாம் தேனிறால்கள் செறிந்துள்ளன வென்க.

(வி - ம்.) மது - ஒரு அசுரன். இவன் விண்டுவினால் உயிர் துறந்தவன். புதல்வி - வள்ளி.

(27)

 நரந்த மாதுளை நாளிகே ரம்முருக்
 கரம்பை யாசினி யாம்பிரந் தீங்கனி
 நிரந்த ரித்தன நின்னெதிர் காணிய
 வரந்த ழைத்த வரைகொடு நின்றென.

(இ - ள்.) நாரத்தையும், மாதுளையும், தெங்கும், புனமுருக்கும், வாழையும், பலாவும், மாவுமாகிய இம்மரங்களின் தீவியகனி கலவை யுற்றனவற்றை அடிகள் எதிரே காண மேலாகச் செழித்த மலையானது கொண்டு நின்றன வென்க.

(வி - ம்.) நரந்தம் - நாரத்தை. நாளிகேரம் - தெங்கு. முருக்கு - முருக்க மரம். அரம்பை - வாழை. ஆசினி - பலா. ஆம்பிரம் - மா. நிரந் தரித்தன - கலந்தன. காணிய - காண.

(28)

 கருது தம்பயன் கைக்கொளுங் காலமென்
 றிருது வேற்றுமை யின்றியொ ருங்கவண்
 மருவு கின்றன போன்றவ யின்றொறும்
 பெருகு மெவ்வள னும்பிணை கின்றன.