பக்கம் எண் :

களவுப் படலம்931

 திருமுகங் கனிவாய் களம்வயி றுந்தி
           செறிந்தகா ழல்குலொவ் வொன்றே
 மருவலி னவற்றுக் கொப்பன வில்லை
           யாயினு மொருமுறை வகுப்பாம்.

(இ - ள்.) புருவமும், செவியும், கண்ணும், கன்னமும், பருத்த தோளும், செறிந்ததனமும், துடையும் முதலாகிய அவயவங்கள் ஒன்றனையொன் றொப்பாகுமல்லது வேறு பொருள் அவற்றிற்கு ஒப்பாக மாட்டா. பூவையணிந்த குழலும் ஒளியுள்ள நெற்றியும், மூக்கும், அழகிய முகமும், கொவ்வைக்கனிபோன்ற வாயும், வயிறும், கொப்பூழும், செறிந்த மேகலையணிந்த கடிதடமுமாகிய அவயவங்கள் ஒவ்வொன்றாகப் பொருந்துதலின் அவ்வுறுப்புகளுக் கொப்பான பொருள்கள் இல்லையாயினும் ஒருமுறை யவற்றினுக்குவமானப் பொருள்களை எடுத்துச்
சொல்வாமென்க.

(வி - ம்.) புருவம் முதலியன இரட்டையாகலின் அவை தம்முள் ஒன்றற்கொன்று உவமையாம் என்றவாறு. இனி ஒற்றையான உறுப்புக்கட்கு உவமையில்லை ஆயினும் ஒருவாறு கூறுவாம் என்றார் என்க.

(32)

 உலகின்முச் சுடர்மு னுடையிரு ளொதுக்கி
           யுமைவிழி புதைத்தஞான் றிறுத்த
 குலவிருட் குழாத்தைப் பணித்திறை நாட்டக்
           கொழுஞ்சுடர் மூன்றினுந் தவாத
 பலர்புகழ் திமிர மெனுங்குழல் வதனப்
           பாங்கரிற் றதைதலின் முழுத்த
 நிலவுமா தவஞ்செய் துமிழ்ந்ததன் னகத்து
           நீனிறக் கறையெனப் படுமால்.

(இ - ள்.) உலகினிடத்துச் செங்கதிர்க் கடவுள், வெண்கதிர்க் கடவுள், அழற்கடவுகளாகிய மூன்று சுடர்களின் முன்னர் உடைந்து செல்கின்ற இருளினை நீக்கி உமையம்மையார் (இறைவன்றிருக்) கண்களை மூடிய காலத்துத் தங்கிய (உலகெல்லாம்) வளைத்த இருட் கூட்டத்தைத் தாழ்த்தி இறைவன் றிருக்கண்களாகிய கொழுவிய அங்கி மூன்றினாலுங் கெடாத (அறிஞர்) பலரானும் (முத்தியினும் உளதெனப்) புகழப்படுகின்ற ஆணவமலம் இவள் குழலாகும். இக்குழலானது திருமுகத்தின் பக்கலிற் செறிதலான் (கலைகளெல்லாம்) நிறைந்த வெண்கதிர்க் கடவுள் (தன் பக்கலுள்ள களங்கம் நீங்கப்) பெரிய தவத்தினை இயற்றி நீக்கிய தன்னகத்துள்ள நீலநிறம் பொருந்திய கறையென்று சொல்லவும் படுமென்க.

(வி - ம்.) புறவிருளினும் செறிந்த இருள் இறைவி இறைவன் றிருக்கண் புதைத்துழியுண்டாய பேரிருள்; இவ்விருளினும் செறிந்தது ஆணவ விருள் ஆகலின், அவ்விருளே வள்ளியின் குழற்கு உவமையாகும் என்றவாறு.

(33)