பக்கம் எண் :

களவுப் படலம்939

னானவன் ஒன்றன்மேலொன்றாகப் பொருந்திய மூன்றுலகத்தின் கண்ணுள்ள உயிர்த்தொகுதிகட்கெல்லாம் காமவிளைவை யாக்கினவனாயினான் என்க.

(வி - ம்.) நீலம் முதலியன ஆகுபெயர். தடைஇய - பெரிய. "தடவுங் கயவும் நளியும் பெருமை" என்னும் தொல் - சொல். உரி. சூத்திரத்தானறிக.

(44)

 அவணடை வல்லா தாயினு மெண்க
           ணன்னமு மடிவிழி கூந்தல்
 திவளுரு வல்லா வாயினு நேமிச்
           செங்கைய கமடமீன் புயலும்
 இவளிடை யரிய தவத்தினாற் கற்ற
           லெய்துமே யெனமதித் ததனால்
 உவமையில் களியும் பெருமையுந் தழீஇய
           வெனிலினி யுரைக்குமா றெவனே.

(இ - ள்.) வள்ளிநாயகியார் நடையினைப்போல நடத்தலைச்செய்ய வன்மை (தன்பால்) இலதாயிருப்பினும் எட்டுக் கண்களையுடைய பிரமனாகிய அன்னப்பறவையும், திருவடி, விழி, கூந்தலாகிய இவை மூன்றினுக்கும் விளங்குகின்ற உருவத்தா லொத்தலில் வல்லமையில்லையானாலும் (விண்டுவாகிய) சக்கரப்படையையுடைய ஆமையும், மீனமும், மேகமும் அம்மையாரிடத்து அரியதவத்தினால் (உவமைப் பொருளாதற் செயலைக்) கற்போம் எனக் கருதியதனால் ஒப்பின்றிய களிப்பும் பெருமையும் (இவைகள்) பொருந்தினவென்றால் யாம்விதந்து சொல்லுமாறு எங்ஙன மென்க.

(வி - ம்.) எண்கணன்னம் - பிரமனாகிய அன்னம். கமடம் - ஆமை. மீன் - மீனம். புயல் - மேகம். ஆமைவடிவமும் மீன்வடிவமும் புயல் வடிவமும் விண்டுகொண்டிருத்தலைக் கருதி " நேமிச்செங்கைய கமட மீன் புய" லென்றார். விண்டு ஒரு காலத்து மேகமாக ஒரு கற்பந்தாங்கினமையின் அக்கற்பத்தினுக்கு மேகவாகன கற்பமென்று பெயர். இதனைக் காஞ்சிப் புராணத்தானறிக. எய்தும் :
தன்மைப்பன்மை.

(45)

 தணப்புறி னொருகாற் பெரிதுநீ யாற்றுந்
           தன்மையி னிருந்தன போலும்
 கணப்பிர மரஞ்சூழ் கடிமலர்க் கூந்தற்
           காரிகை விழியென வொருகை
 மணப்புறும் வேலு மவளிளஞ் சாயன்
           மருட்டிய வூர்திமா மயிலும்
 குணப்பெருங் கடலே யிவ்விலை யாயிற்
           கூடுவ தருங்குரைத் தகற்சி.

(இ - ள்.) (அம்மையார் அடிகளை) ஒரு காலத்து நீங்கினும் அடிகள் பெரிதும் ஆறுதல் அடைந்திருக்குந் தன்மையினானே பொருந்தி