பக்கம் எண் :

94தணிகைப் புராணம்

(வி - ம்.) ஒழிவளம் - (தங்கள் நகரங்களில்) இல்லாத செல்வம். காவியங்கிரி - தணிகை. இந்திரன், முருகக் கடவுளை வழிபடும் பொருட்டுத் தேவருலகினிருந்து கொணர்ந்து இம்மலைச் சுனையில் காவியை வைத்து மலர் பறித்து வழிபட்டமையிற் காவியங்கிரியெனத் தணிகைக்குப் பெயர் வந்ததென்க. அங்கண் - அவ்வவ் வுலகங்கள் நாட்டவும் நிலைநிறுத்துச் சொல்லப்படுமோ என்க.

(4)

 புல்லி தாகிய பொன்னக ராதிமேற்
           பொருந்துவ தடாதென்ன
 வல்லை நூறிய வெழுவதோர்ந் தித்தலம்
           வகுத்துழி வரைகீண்டோன்
 செல்லு றாவகைப் பலவரை யாப்புறச்
           சிவணுவித் தாற்றாவென்
 றல்ல னுக்குபன் மணிச்சிலம் பிடைப்படைத்
           ததன்றலை யமர்ந்திட்டான்.

(இ - ள்.) கிரௌஞ்ச கிரியைப் பிளந்த முருகக் கடவுள் இத்தணிகையைப் படைக்கின்ற காலத்து இத்தணிகையானது அற்பமாகிய தேவருலக முதலிய உலகங்கள் மேலே பொருந்துவது இயையாதென்று விரைவாக அழிக்க எழுவதுணர்ந்து, மேலே செல்லாதவண்ணம் பல வரையாகிய ஆப்புகளுறும்படி பொருந்துவித்து அவ்வாப்புகள் போதாதன என்று கருதி இருளைக் கெடுக்கின்ற பல மணிகளோடு கூடிய தணிகை மலையை நகரிடையே படைத்து அதன் முடியின் கண்ணே விரும்பித் தங்கினான்.

(வி - ம்.) நூறிய - அழிக்க. வரைகீண்டோன் இத் தலம் வகுத்துழி என மாற்றுக. வரைகீண்டோன் : எழுவாய். வரையாப்புற - வரை ஆகிய ஆப்பு உறும்படி. சிவணுவித்து - பொருந்துவித்து. ஆற்றா தனவென்று - பொருந்தாதன வென்று கருதி. அனுக்கு - கெடுக்கின்ற. மணிச்சிலம்பு - தணிகைக் குன்றம். தலை - சிகரம்.

(5)

 பரவு காஞ்சியிற் பற்பல விம்மிதம்
           பணித்தவ ணொழியாமை
 அரவ மாலைய னமைந்தது முலகெலா
           மழிப்பமேக் கெழும்பௌவம்
 விரவு றாதயல் விலக்கலுங் குருமொழி
           விளம்பிய விடனாமிக்
 குரவ னீள்வரை யெல்லையி னிருந்தவக்
           கொள்கையைக் குறித்தன்றே.

(இ - ள்.) யாவராலும் துதிக்கப் பெறுகின்ற காஞ்சிமா நகரத்தின் கண் பற்பல ஆச்சரியச் செயல்களைச் செய்து அக்காஞ்சிக்க ணின்றும் நீங்காமல் அரவ மாலையை யுடைய சிவபெருமான் எழுந்தருளி யிருந்ததும்,