பக்கம் எண் :

திருநகரப் படலம்95

உலகங்க ளெல்லாவற்றையும் அழிப்ப மேலே பொங்கி வருகின்ற கடலானது கலக்காமல் பக்கத்தே விலகச் செய்ததும், ஆகிய இவ்விரு செயல்களும் தனக்குச் செவியறி வுறுத்திய இடமாகிய பரமாசாரியனாம் முருகக் கடவுள் எழுந்தருளி யிருக்கின்ற தணிகாசலத்தின் எல்லையின் கண் தான்செய்த பெரிய தவத்தின் கொள்கையைக் குறித்த தல்லவா?

(வி - ம்.) இறைவன் தணிகை எல்லையிற் றவஞ் செய்ததை,

 "வளமலைச் சாரலின் வடகிழக் கெல்லையின்
  இளமதிச் சடையவிழ்த் திம்பரிற் றாழ்த்துபு
  களமிகுப் போரெனக் கருதருந் தியானமோ
  டுளமலி தவமொரு கணிகமுற் றானரோ"

என்னும் வீராட்டகாசப் படலம் 114 ஆம் பாட்டா னறிக.

மேக்கு - மேல். குருமொழி விளம்பல் - உபதேசம் செய்தல். குரவ னீள்வரை : தணிகை.

(6)

 ஓவ வம்பல மிரசித வம்பல
           மொளிர்பொனம் பலங்கண்டோர்
 பாவ நுங்கொளி யரதன வம்பலம்
           பதமெடுத் திறையாடல்
 மேவ வஞ்செவிக் குருமொழி வைத்தவன்
           வியன்றணி கையைநோக்கின்
 சாவ வவ்வுழித் தென்றிசைக் கடவுளைச்
           சாடுதற் கருத்தன்றே.

(இ - ள்.) சித்திர சபையின்கண்ணும் வெள்ளியம்பலத்தின்கண்ணும் விளங்குகின்ற பொன்னம்பலத்தின் கண்ணும் தரிசித்தோர் பாவத்தைக் கெடுக்கின்ற ஒளியோடு கூடிய இரத்தின சபையின் கண்ணும் இறைவன் திருவடியைத் தூக்கித் தென் திசையை நோக்கித் திருநடனம் செய்தல் அழகிய செவியிடத்துப் பொருந்த உபதேசஞ் செய்தவனாகிய பரமாசாரியன் எழுந்தருளி யிருக்கின்ற தணிகை மலையை நோக்கினால், நோக்கிய அவ்விடத்தே சாம்படி தென்திசைக் கிறைவனாகிய இயமனை உதைத்துக் கொல்லும் கருத்தாம்.

(வி - ம்.) ஓவ அம்பலம் - சித்திரசபை; குற்றாலத்தின் கண்ணது. இரசத அம்பலம் - வெள்ளியம்பலம்; மதுரையின்கண்ணது. பொன்னம்பலம் - கனகசபை; சிதம்பரத்தின்கண்ணது. அரதன அம்பலம் - இரத்தினசபை; திருவாலங்காட்டின்கண்ணது. ஆடல் : எழுவாய். இறைவன் தெற்கு முகமாய்த் திருவடி யெடுத்தாடல், தணிகையின் கண்ணுள்ளாரைக் கொல்ல நோக்கின் இயமனை உதைத்துக் கொல்லும் கருத்து என்க. தணிகை - இடவாகு பெயர். அஞ்செவி மேவ எனக் கூட்டுக. அவ்வுழிச் சாவ என மாற்றுக.

(7)

 வார ணப்பிரான் மணிநகர் துறக்கமே
           மணிப்பொகுட் டலர்வாழ்க்கை