பக்கம் எண் :

96தணிகைப் புராணம்

 ஆரணப்பிரா னணிநகர் சத்திய
           வுலகமே யராப்பள்ளி
 நார ணப்பிரா னகர்கள்வை குந்தமே
           நன்றெழுந் தார்த்தாடுங்
 காரணப்பிரா னகர்சிவ லோகமே
           கரைந்தவத் தலைமாதோ.

(இ - ள்.) மேற் கூறிய அத்தணிகையானது (முருகப் பெருமான் பக்கலில் வேட்ட வரங்களைப் பெறுதற்கு ஆண்டுத் தங்குதலால்) வெள்ளை யானையை யுடைய தலைவனாகிய இந்திரனது அழகிய நகரமாகிய துறக்கமே யாகும். (வேட்ட வரங்களைப் பெறுதற்குத் தங்கலால்) வேதத்திற்குத் தலைவனாகிய பிரமன் நகரமாகிய அழகிய சத்தியவுலகமாகும். (விரும்பிய வரங்களைப் பெறுதற்குத் தங்கலால்) பாம்பாகிய அணையை யுடைய நாரணனாகிய தலைவன் நகராகிய வைகுந்தமேயாம். (விரும்பிய வரம் பெறுதற்கு ஆண்டுத் தங்கலால்) எழுந்தருளி நன்றாக ஆர்த்தாடுகின்ற (எல்லா வுலகிற்கு மூல) காரணராகின்ற தலைவராகிய சிவபெருமான் நகரமாகிய சிவலோகமேயாம்.

(வி - ம்.) அத்தலை - தணிகையாகிய அவ்விடம். நகராகிய துறக்கம் என்க. இவ் விறைவர்கள் தங்குழுவுடன் ஈண்டுதிவதலின் இவ்வாறு கூறினார். நகர்கள் என்பதில், கள் பகுதிப் பொருள் விகுதி. நன்றாக எழுந்தாடு மெனக் கூட்டுக.

(8)

 புடைந கர்த்தலை யசுத்ததத் துவமெனப்
           பொலிந்தது வளஞ்சான்ற
 இடைந கர்த்தலை யிலங்குசுத் தாசுத்த
           மெனப்பொலிந் தஃதுள்ளால்
 மிடைந கர்த்தலை சுத்ததத் துவமென
           விளங்கிய தவைமூன்றும்
 உடைய தத்துவ மவைகடந் தொளிர்வதொத்
           தோங்கிய துயர்குன்றம்.

(இ - ள்.) புடை நகரிடமானது அசுத்த தத்துவமென்று சொல்லும்படி விளங்கியது. (பலவகை) வளங்களும் நிறையப்பெற்ற இடைநகரிடமானது, விளங்காநின்ற சுத்தா சுத்த தத்துவமென்று சொல்லும்படி விளங்கியது. அதனுள்ளே பொருந்திய உண்ணகரிடமானது சுத்த தத்துவமென்று சொல்லும்படி விளங்கியது. இவை மூன்றையு முடையதாகிய உண்மைப் பொருளாகிய சிவம் இம் மூவகைத் தத்துவங்களையும் கடந்து (அப்பாற்பட்டு) விளங்குவதை யொத்தோங்கியது உயர்ந்த தணிகை மலையானது.

(வி - ம்.) புடைநகர் முதலிய மூன்றும் ஒன்றினொன் றுயர்ந்த மூவகைத் தத்துவமாகக் கூறினார்.

(9)