| | பூந்தா மரையும்பைங் காவியு முல்லையும் பூத்தகொக்கும் | | | தேந்தா துகுக்கு மசோகமுந் தீங்கரும் புந்தழுவிக் | | | காந்தா ரழற்குண வானோ னுருக்கொடு காழ்பகையின் | | | சீந்தா வெமைப்பொரு வான்சென்று பாசறை நின்றனனே. |
(இ - ள்.) பொலிவுபெற்ற தாமரையும், பசிய காவியும், முல்லையும், மலர்ந்த மாவும், தேனுடன்கூடிய மலர்ப்பொடியைக் கொட்டும் அசோகமும், இனிமை பொருந்திய கரும்பினையுந் தழுவி அழற்றுகின்ற நிறைந்த அழலினுக்குணவாகிய வடிவழிந்த மதன் (இங்ஙனம் தோன்றா நிற்கும்) வடிவுகொண்டு வயிரம் பொருந்திய பகைவராற் சீறப்பெறாத வெம்மைப் பொரும்பொருட்டுத் தனது பாசறையாகிய சோலையின்கண் நின்றன னென்க. (வி - ம்.) பகை : ஆகுபெயர். சீந்தா - சீறாத. சீந்தா : சிந்தியெனக் குறுக்கல் விகாரமாக்கி மலர்க்கணையைச் சிந்தியெனப் பொருள் கோடலுமாம். இச்செய்யுள் உடனிலைச் சிலேடை. உடனிலைச் சிலேடையாவது ஒருபாட்டு இரண்டு வகையாற் பொருள்கொண்டு நிற்பது : அவ்விரண்டனுள்ளும் இக்கோவைக் கலித்துறையினுரைக்கின்ற பொருளாவது அழற்குணவாகியமதனன் வடிவுபெற்றுத் தாமரையையும் காவியையும் முல்லையையும், கொக்கினையும் தழுவிப் பகைவராற் சீறப்பெறாத வெம்மைப் பொருதல் விரித்துரைக்கப் படுகின்றது என் சொல்லியவாறோ வெனின் தாமரை மருதநிலத்துப் பூவாதலான் மருதமும், காவி நெய்தனிலத்துப் பூவாதலான் நெய்தலும், முல்லை முல்லை நிலத்துப் பூவாதலான் முல்லையும், மா பாலைநிலத்துப் பூவாதலான் பாலையும், அசோகு குறிஞ்சிநிலத்துப் பூவாதலான் குறிஞ்சியும் என இவ்வைந்து பூவினாலும் ஐந்திணையும் சுட்டினார். இதனால் அகத்தமிழின் பெருமை கூறினார். எங்ஙனமெனின் : "முதலிற் கூறுஞ் சினையறி கிளவியான் தாமரையெனவே பூவான் நிலமும், நிலத்தின் உரிப்பொருளாகிய ஊடலும் ஊடனிமித்தமும், காவியெனவே பூவான் நெய்தனிலமும் அதனுரிப் பொருளாகிய இரங்கலு மிரங்கனிமித்தமும், முல்லையெனவே பூவான் முல்லைநிலமும் அதனுரிப் பொருளாகிய இருத்தலும் இருத்தனிமித்தமும், கொக்கெனவே பூவான்பாலையும் அதனுரிப் பொருளாகிய பிரிதலும் பிரிதனிமித்தமும், அசோகமெனவே பூவான் நிலமும் அதனுரிப் பொருளாகிய புணர்தலும் புணர்தனிமித்தமும் கூறினார். நிலங்களைச் " சொல்லிய முறையாற் சொல்லாது" குறிஞ்சிக்கு ஏனைய நிலங்களை அடையாகவும் அக்குறிஞ்சியை அடைகொளியாகவுங் கூறற்குக் காரணமென்னை யெனின், ஓரிடத்தொரு மணவினை நிகழின் எல்லாரிடத்துமுள்ள அணிகலன்களு மவ்விடத்திற் பொருந்தி அவ்வினையைச் சிறப்பித்தல்போல ஊடல் முதலிய உரிப்பொருள்களும், நிமித்தங்களும் புணர்தலாகிய உரிப்பொருளையும் அதன் நிமித்தத்தையும் அடையாய் நின்று சிறப்பிக்கக் குறிஞ்சி அடைகொளியாய் இறுதிக் கண் சிறப்புற்று நின்றதென்க. இத்தலைமகன் தான் கண்டவுருவினை இறைவன் அழற்கண்ணிற்கு உணவான அநங்கன் தாமரை முதலிய கணைகளைத் தழுவிப் பொருவான் சென்று பாசறையாகிய சோலையில் சென்று நின்றனன் என உவகை மிகுதியாற் கூறினானாகலின் இப்பாட்டிற்கு மெய்ப்பாடு உவகை. இத்திருவுரு இவனை உவப்பித்தலி னுவகையாயிற்று. பயன் - மகிழ்தல். என்னை "சொல்லெதிர் பெறான் சொல்லியின்புறுதல், புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே" |