| (வி - ம்.) இமைகள் விழியைத் தடுக்காதிருப்பின் என்கண் உயிரைக் கொல்லுமென வெண்ணி இமைகள் புடையாடுவ என்க. படை - வேல், வாள் முதலிய படைகள். போக்கு - குற்றம். பேறு - தவப்பேறு. வைகல் - தங்கல். "பூதலத்தோ ரணங்கே" துணிவு கூறப்பட்டது. மெய்ப்பாடு மருட்கையினீங்கிய பெருமிதம். பயன் - தெளிதல். தெய்வங் கொல்லோவென ஐயுற்றுநின்ற தலைமகன் கானிலந் தோய்தன் முதலிய குறிகண்டு தெய்வமல்லள் மக்களுள்ளாளெனத் துணிந்தா னென்க. (59) வியப்பு அஃதாவது தெய்வமல்லள் எனத் தெளிந்த பின்னர் மக்களுள்ளாளென அவளுறுப்பினையும் மென்மைத் தன்மையினையுங் கண்ணுற்றுச் சென்றெய்த நினையா நிற்றல். | | அங்கலுழ் மேனிநல் லாள்விழி போற னமக்கணியாம் | | | பங்கயன் மாலும் பரவுந் தணிகைப்பைம் பூஞ்சுனையில் | | | செங்கழு நீர்க்கு மரிதுசெவ் வேற்கு மரிதவடன் | | | பொங்கிளஞ் சாய னிகர்த்தல் பொறிமயிற் கும்மரிதே. |
(இ - ள்.) அழகு விளங்குகின்ற மேனியையுடைய நல்லாள் விழியினை ஒத்தல் நமக்கணியாகிய பிரமனும் மாலும் பரவாநின்ற தணிகை மலையின்கண்ணுள்ள பொலிவுபெற்ற சுனையின்கண்ணுள்ள செவ்விய கழுநீர் மலருக்கும் இல்லை. (நம்) கையின்கண்ணுள்ள வேற்படைக்கு மில்லை. அவள் மென்மைத் தன்மையினை ஒத்தல் (நம் மூர்த்தியாகிய) புள்ளிகளையுடைய மயிற்பறவையினுக்கு மில்லை யென்க. (வி - ம்.) விழியைப் போறல் கழுநீர்க்கும், வேற்கும், சாயலைப் போறல்மயிற்கும் அரிதென்க. அணியாம் கழுநீரென வியையும். செங் கழுநீரும், வேற்படையும், ஊர்தியாகிய மயிலும் விழியினுக்கும், சாயலுக்கும் ஒப்பாகா வென்பார். கழுநீர்க்கும், வேற்கும், மயிற்கும் அரிதென வியந்து கூறியது அவற்றின்பெருமை விளங்கித் தோன்றுதல் நோக்கி. மெய்ப்பாடு உவகையைச் சார்ந்த மருட்கை : வியந்துரைத்தலின். பயன் ஐயந்தீர்ந்து மகிழ்தல். இவை நான்கு பாட்டும் ஒருவருள்ளக் கருத்தை ஒருவரறியாத ஒருதலைக் காமமாதலின் கைக்கிளைப்பால. அகத்திணையிற் கைக்கிளை வருதல் திணைமயக்காம் பிறவெனின் கைக்கிளையும் பெருந்திணையும் அகத்தைச் சார்ந்த புறமாயினும் கிளவிக் கோவையின் எடுத்துக் கோடற்கண் காட்சி முதலாயின கூறுதல் வனப்புடைமை நோக்கிக் கைக்கிளை தழுவினார். குறிப்பறிதல் அஃதாவது தலைவன் தான்குறித்த புணர்ச்சி வேட்கையான் நயந்து சென்றெய்த நினையாநின்றவன் தன்பா லவளுக்குளவாகிய காதலை அவள்கண் குறிப்பினாற் கண்டுணர்தல். |