பக்கம் எண் :

948தணிகைப் புராணம்

யணிந்ததனங்களை யுடையாளை வகைமிகுந்த ஆயக்கூட்டத்தினின்றும் நாம் முன்னர்ச் செய்ததவம் (தனிமையாம் வண்ணம்) பிரித்த தென்க.

(வி - ம்.) வறங்கூர்ந்தவன் - நிரப்பிடும்பையாளன். திறம் - வகை. கிளை - ஆயக்கூட்டம். இவையிரண்டும் தலைவனுந் தலைவியும் நோக்கெதிர் நோக்கலின் ஒருதலைக் காமமல்ல வெனினும் புணர்ச்சி நிகழாமையின் கைக்கிளையின்பாற் படுமென்க. "வழுக்கிவந்து நிறங்கூரமிழ் தம்படின் பின்மாந்த நினைவதுண்டோ" வென்றமையான் புணர்ச்சி துணிதல் பெற்றாம்.

(62)

வேறு

 காண்டன்முந் துறுத்தல்கூற்றுக் கைக்கிளை தலைவ னெய்தப்
 பூண்டதன் காத னாட்டிப் புகுமுகம் புரிந்த நங்கை
 நாண்டக நுதல்வே ராட நகைமுகங் கரந்து வேற்றோர்
 மாண்டவுட் சிதைவு காணா மரபினா னிறைஞ்சி நின்றாள்.

(இ - ள்.) காட்சியினை முதலாகக்கொண்ட (ஐயம், துணிவு, வியப்பு, குறிப்பறிதல், புணர்ச்சி துணிதலாகிய) கூற்றுக்களையுடைய கைக்கிளைத்திணையைத் தலைவனடைய மேற்கொண்ட தன் காதலை நிலை பெறச் செய்து தலைவன் நோக்கிற்கு எதிர்நோக்குதலைச் செய்ய விரும்பும் உள்ள நிகழ்ச்சியையுடைய தலைவி நாண்டடுக்க (தலைமகன் தன்னை நோக்கியவழி உட்கும் நாணும் ஒருங்கு வந்தடைதலின்) நுதலினிடத்து வியர்வை தோன்றலும், (அதன் பின்னர்த் தலைமகன்கட்டோன்றிய குறிப்புக்களான் அதற்கேதுவாகிய நயனுடைமை மனத்திற் பிறந்த வழியும்) நகைத்தலைத் தன்னிடத்து மறைத்தும் (அங்ஙனம் நகைமுகங் கரந்த பின்னரும் தலைவி உள்ளஞ் சிதைந்து நிறையழியுமாகலின் அச்சிதைவு) மாட்சிமைப்பட்ட (தனது) உள்ளஞ் சிதைத்தலைப் புறத்தார் காணாததன்மையானே தலைகவிழ்ந்து நின்றனளென்க.

(வி - ம்.) காட்சியை முதலாகக்கொண்ட ஐயம், துணிவு, வியப்பு, குறிப்பறிதல், புணர்ச்சி, துணிதன் முதலிய கூற்றுக்களையுடைய கைக்கிளையென்க. இப்பாட்டு முதல் களவுப் புணர்ச்சிக்கு முன்னர் நிகழும் மெய்ப்பாடு மூன்றன் பகுதியெனவும், அவற்றுள் முதலன இவையென இப்பாட்டானுணர்த்தினர். அவையாவன : புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநயமறைத்தல், சிதைவு பிறர்க்கின்மை என்க. இவைகளையும் பின்வருவனவற்றையும் தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலிற் காண்க.

காட்சி முதலாகக்கொண்ட கிளவித்தொகையைத் தன்பாற் சேர்த்துக் கைக்கிளைத்திணையைத் தலைவன் அடையத் தலைவிதான் மேற்கொண்ட காதலை நிலைபெறச்செய்து (புணர்ச்சிக்குறியைத் தலைவற்குக் காட்ட, புகுமுகம் புரிதல் உட்கும் நாணும் தகுதியாக நுதல் வியர்க்க நகுகின்ற நயத்தை மறைத்து அயலார் மாட்சிமைப்பட்ட உள்ளத்தின் சிதைவைக் காணாத தன்மையிலிறைஞ்சி
நின்றாளென்க.

(63)

 மையவிர்ந் தொளிருங் கூந்தன் மணிக்குழ னெகிழ்ந்து சோரப்
 பெய்யும்வண் காதி லொன்று பெயர்ந்துமண் ணிடத்த தாகக்
 கையணி தொடியு மற்றுங் கழல்வன செறித்துப் பல்கால்
 நையிடை நுழைந்து நில்லா நன்கலை யுடுக்கு நீராள்.