| (இ - ள்.) அத்தலைவியின் உடல் எனதரிய உயிரினுக்கு முடலேயாம். ஈரிய குழலையுடையாள் அரியவுயிரினுக்கு முடலே எனதுடல், (அவளைக்) கலந்து நின்ற எனதரிய உயிரினுக்கு உயிரேயாம் அவளுயிர். அணிகலங்களை ஏந்திய தனங்களையுடையாள் அரிய உயிரினுக்கும் என தொப்பற்ற உயிர் உயிரேயாம். (வி - ம்.) மெய்ப்பாடு - உவகையைச் சார்ந்த மருட்கை. பயன் மகிழ்தல். (68) தெய்வத்தை மகிழ்தல் தெய்வத்தை மகிழ்தல் என்பது என்பால் விழைவினையுடைய இவளைத்தந்த தணிகைக்கண்ணுள்ள குமாரலிங்கேசன் றிருவருளை மறவே னென மகிழ்ந்து கூறாநிற்றல். | | ஆரா வமுதனை யாளையென் னாருயி ராகிநின்ற | | | வாரார் முலையைவள் ளிச்சிலம் பூடு மணப்பநல்கும் | | | சீரார் தணிகைக் குமாரலிங் கேசன் றிருவருளின் | | | பேரா விரகு மறவே னுலகு பெயரினுமே. |
(இ - ள்.) உண்ண உண்ண அமையாத அமிழ்தினை ஒத்தவளை எனதரிய உயிராகி நிலைபெற்ற கச்சணிந்த முலையினையுடையாளை வள்ளி மலையின்கட் கூடத்தந்தருளும் சிறப்புப் பொருந்திய தணிகைமலையின் கண்ணுள்ள குமாரலிங்கேசன் திருவருளின் நீங்காத சூழ்ச்சியை இவ்வுலகந் தலைகீழாகப் பெயர்ந்தாலும் மறவேனென்க. (வி - ம்.) வார் - கச்சு. விரகு - சூழ்ச்சி. மெய்ப்பாடும் பயனும் அவை. (69) கிளவிவேட்டல் அஃதாவது புணர்ச்சியெய்தி இன்புறாநின்ற தலைமகன் உறுதன் முதலிய நான்கு புணர்ச்சியினையும் பெற்று செவிப்புணர்ச்சி பெறாமையின் மொழி வேட்டு வருந்தாநிற்றல். | | ஆடிய கூத்தன் முடிமதி வாணுத லைங்கரத்தோன் | | | பீடியல் கும்பம் பெருமுலை பின்னவன் சென்னிமிலை | | | தோடியல் காந்த டுணைக்கர மென்னிற்றொன் மாண்புமைகைக் | | | கூடிய கிள்ளை குறுந்தொடி யாண்மொழி கேட்பதென்னே. |
(இ - ள்.) ஆடுதலைச் செய்த கூத்தப்பிரான் முடித்துள்ள மதி ஒளி பொருந்திய நுதலாகும். திருக்கைக ளைந்தினையுடைய மூத்த பிள்ளையார் பெருமை பொருந்திய மத்தகம் பெரிய முலையாகும். (அவன்) இளைய பிள்ளையார் தலையின்கட் சூடிய இதழ்கள் பொருந்திய காந்தள் மலர்கள் இரண்டாகிய கைகள். (இவற்றது) தன்மை இதுவானால் பழைமையாகிய மாட்சிமையுடைய உமையம்மையாரின் கையின்கட் பொருந்திய கிளியின்மொழி குறுந்தொடியினை யணிந்தவள் மொழியாகும். (இனி) கேட்க வேண்டுகின்றதென். இப்பெற்றிக்குத் தக்கதாயே இருக்குமென்க. (வி - ம்.) மெய்ப்பாடு - உவகை. பயன் - நயப்புணர்த்தல். (70) |