பக்கம் எண் :

954தணிகைப் புராணம்

 தெளிவா னமிழ்த நுகர்ந்து சிறிய விடநுகர்ந்தாங்
 களிவார் குழலி மனத்தைப் பிரிசொ லழுங்கல்கண்ட
 தொளிவா னவர்த முலகுஞ் சமழ்ப்பவொண் டாதுறைத்துக்
 குளிர்வாய் பொதும்பர் குலாயெழில் வாய்ந்தொளிர் குன்றகத்தே.

(இ - ள்.) (கண்டார் கண்ணொளியைக் கவரத்தக்க) ஒளியையுடைய தேவர்கள் நாடும் நாணமெய்த ஒள்ளிய மலர்ப்பொடியைச் சிந்துதலான் குளிர்ச்சி யெய்திய சோலைபொருந்தி வனப்புவாய்க்கப் பெற்று ஒளிர்கின்ற மலையினிடத்துத் தெளிவினையுடைய வானின்கண் ணுள்ள அமிழ்தினை உண்ணுதல் செய்து (அதனுடன்) சிறியநஞ்சினையு முண்டாற்போல வண்டுகள் மொய்க்கும் கூந்தலினையுடைய மனத்தினைப் பிரிவையுணர்த்துஞ் சொல்லானது வருத்தஞ்
செய்ததென்க.

சமழ்த்தல் - நாணல். தாது - மலர்ப்பொடி. உறைத்தல் - துளித்தல். ஈண்டுதிர்தல். பிரிசொல் - பிரிவை யுணர்த்துஞ்சொல் "ஆடூஉ வறிசொல்" லென்றாற் போலக் கொள்க. தொல் - சொல். கிளவியாக்கம். மெய்ப்பாடு : அச்சத்தைச்சார்ந்த மருட்கை. பயன் : ஐயந்தீர்தல்.

(74)

தெய்வத்தன்மைகூறல்

அஃதாவது, தலைமகன் இற்பழியாமெனக் கூறக்கேட்ட தலைமகள் இதனை நந்தோழி அறியின் யாதாங்கொலென்று நீங்குதலை உட்கொண்டு நீங்கலாற்றாது வருந்தாநிற்ப அக்குறிப்பினை அறிந்து தலைமகள் பிரிவுடம்படுவது காரணமாகத் தலைமகன் யாம் பிரிந்தேமாயினும் நம்முட் பிரிவில்லையெனத் தெய்வத்தின்தன்மை கூறாநிற்றல்.

 இந்நாள் வரையு மெனையறிந் தாயில்லை யிந்தமணம்
 முன்னா நுதலிற்று முண்டுகொ லோமுறி வாய்ந்தகொம்பர்
 அன்னாயவ் வாறறி வானன்று கூட்டிய வக்கடவுள்
 பின்னா வெறுப்பினுந் தான்றுணி யாது பிணிப்பிக்குமே.

(இ - ள்.) இந்நாள் காறும் என்னை நீயறிந்தாயில்லை. இம்மணத்தினை நாமிருவரும் முன்னர் நினைந்தது முண்டோ. தளிர்கள் பொருந்திய கொம்பினையொத்தவளே. அவ்வாற்றினை யறிபவனாகி அஞ்ஞான்று புணர்த்த அக்கடவுள் பின்னாக நாம் வெறுத்தாமாயினும் அது துண்டு படுத்தாது கூட்டத்தினை யெய்துவிக்குமென்க.

(வி - ம்.) நுதலல் - கருதல். அவ்வாறு - அந்தத்தன்மையினை. அறிவான் - முற்றெச்சம் "கச்சினன் கழலினன்" என்பதுபோலக் கொள்க - திருமுருகாற்றுப்படை. பின் - பின்னாக. துணியாது - துண்டுபடுத்தாது ; நீக்காது. பிணித்தல் - சேர்த்தல். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வன்புறை. பெரியதோ ருவகை தோன்ற இங்ஙனம் வற்புறுத்தினானென்க.

(75)

தன்னிலை யுரைத்தல்

அஃதாவது, தெய்வத்தன்மை கூறிய தலைமகன் உன்னையான் நீங்குவேனாயின் உயிர்நீங்கிய தேகமும், மணியை நீக்கிய உரகமும்.