பக்கம் எண் :

956தணிகைப் புராணம்

விடலிபெட்பே னல்லேன்" என்றான். எண்குணம் வெளிப்படை. அராத்திண் குணம் - பாம்பாகிய நாண். விடலி - விடுதல். தொழிற் பெயர். முதற்றன்மை - சிவமாந்தன்மை. வரைக்கு : வேற்றுமை மயக்கம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : விடலரி தெனல்.

(77)

தெளித்தல்

அஃதாவது : நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன். பிரியின் அறனல்லது செய்வேனுமாவ லெனத் தலைவி மனத்துத் தேற்றம்படக் கூறுதலென்க.

 அறன்மறந் தல்ல புரிவா ரமர்க்கிடைந் தஞ்சுநர்பால்
 மறன்மறந் தல்ல புரிவாரு மாகுவன் மாதுநின்னைப்
 புறன்மறந் தல்ல புரிகுவ னேலிப் புகன்மொழியின்
 திறன்மறந் தல்லற் பெயரா தமைதி திருந்திழையே.

(இ - ள்.) மாதே நின்னைப் புறத்தேசென்று மறத்தல்செய்து வேறு காரியங்களை இயற்றுவேனேல் அறத்தினை மறந்து அறமல்லனவற்றைச் செய்வாரும், போர்த்தொழி லியற்றவருந்தி அஞ்சுகின்றவரிடத்து வீரச்செயலை மறந்து வீரமல்லனவற்றைச் செய்வாருமாகுவன். (நான் இங்ஙனங் கூறிய) விழைவினைத் தரத்தக்க (நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன் எனக் கூறிய) சொல்லின் வகையினை (நீமறந்து) திருந்திய அணிகலங்களை யுடையாளே துன்பத்தினிடத்துச் செல்லாதமைவா யென்க.

(வி - ம்.) அமர்க்கிடைதல் - போர்த்தொழிலினுக்கு வருந்தல். அறம் - தருமம். அல்ல - அறமல்லன, மறம் அல்ல - அன்பெறாத அகரவீற்றுப் பலவறிசொல். மறன் ஈண்டு வீரம். புகன்மொழி - (யானிப்பொழுது கூறும்) விழைவினைத் தரும் உண்மைமொழி யென்பாருமுளர். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : தெளிவித்தல்.

(78)

இடமணித்தென்றல்

அஃதாவது தெளிவித்து வற்புறுத்தவும் ஆற்றாமை நீங்கிலாத கிழத்திக்கு நும்மூரிடத்தினும் எம் ஊரிடம் இத்தன்மையனவெனத் தன்னூரினணிமைகூறி வற்புறுத்தாநிற்றல்.

 காந்தளம் போது கமழுமெம் மூர்வரைக் காவியிற்றேன்
 மாந்தளி பாய்ந்துநும் மூர்வரைச் சோலை மதுநுகரும்
 தேந்தளி தூவுஞ்சில் லோதிநல் லாய்சென்று மீட்சிசெவி
 போந்தளி வாட்கண் மறிவது நீட்டிக்கும் பூங்குழலே.

(இ - ள்.) பூவையணிந்த கூந்தலை யுடையவளே, காந்தட் செடியின் மலரும் பருவத்தரும்பு கமழ்கின்ற எமதூரின்வரைக் கண்ணுள்ள காவிமலரிடத்துத் தேனை உண்ணுகின்ற வண்டினங்கள் பாய்தல்செய்து நுமது ஊரினது வரையின்கண்ணுள்ள சோலையினிடத்துத் தேனை நுகரா நிற்கும் (அத்துணை யணிமைத்து ஆதலால்) தேனின்றுளிகளைச் சிந்து