பக்கம் எண் :

958தணிகைப் புராணம்

(இ - ள்.) பிடரின்கண் இரண்டு கண்களை (பிரமன்) படைத்தல் செய்யாத காரணத்தினாலல்லவா எனது அரிய உயிரினை வருத்தத்தின் கட் டங்கும்வண்ணஞ் செய்ய முகத்தினைப் பின்னிட்டு மயில்போலுஞ் சாயலினையுடைய இத்தலைவி நடவாநின்ற திருத்தத்தினுக்கு நாணமுற்றன்றோ (அந்நாணத்தால்) வெண்ணிறமுற்றன வென்று உலகத்தார் சொல்லாவண்ணம் பிரமன் வாகனமாகிய அன்னப்பறவையும், உலகில் நீதியை நிலைபெறச் செய்கின்ற தலைவனாகிய இந்திரனூர்தியாகிய வெள்ளையானையும் (இத்தலைவியின் தோற்றத்திற்கு) முன்னரே வெண்ணிறமுற்றுப் புகழைத் தன்பாற் கொண்டன வென்க.

(வி - ம்.) எருத்தம் - பிடர். முகம் பிறக்கிடுதல் - திரும்பிநோக்கல். மயிலின் சாயலினையுடைய தலைவியின் நடைக்குத் தோற்று நாணமுற்று வெண்ணிறமுற்று வெளுத்தனவென்று உலகினர் கூறாவண்ணம் இயல்பின் இவையிரண்டும் வெண்ணிறமுடையன வென்பார். "அயனூர்தி செங்கோல் பொருத்தத்த னூர்தியும் பண்டேவிளர்த்துப் புகழ் கொண்டவே" என்றார். செங்கோல் பொருத்தத்தன் - இந்திரன் : வேந்தன் மேயதீம் புனலுலகம் என்றார். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : கிழத்திசேறல்.

(81)

ஆங்கவளருமை பாங்குறத் தெரிதல்

அஃதாவது ஆயக்கூட்டத்திற் சேறலைக் கண்ட தலைமகன் ஆயர் கூட்டத்தினையும் அவ்விடத்தினையும் நோக்கி இவளை யான் எய்தினே னென்பது மாயமோ யாதோ யானறியே னெனக் கூறாநிற்றல்.

 கூம்பிய கையினர் கோட்டிய சென்னியர் கோதுதப
 ஓங்கிய வுள்ளத் தொழுகின ராயவெள் ளங்குமுதம்
 தேம்பிய சிற்றிடை யாண்முகந் திங்கள்செத் தாலிங்ஙனே
 காம்பிய றோளி கிடைத்தது மாயங்கொல் காண்பரிதே.

(இ - ள்.) கையினைக் குவித்துத் தலையினை வளைத்துக் குற்றம் நீங்க உயர்ந்த உள்ளத்தினோடு ஒழுகுகின்றவர்களாகிய வெள்ளம் என்னும் அளவினையுடைய ஆயத்தார் குழு செவ்வல்லி மலராகும் (தன பாரத்தால்) வருந்துகின்ற சிறிய நுசுப்பினையுடையாளது முகம் வெண்கதிர்க்கடவுளை ஒத்திருக்குமாயின் இவ்விடத்து மூங்கிலின் இயல் அமைந்த தோளினையுடையாள் (நமக்கு) கிடைத்தது வஞ்சகமோ (இதனுண்மை காண்டல்) அரிதென்றா னென்க.

(வி - ம்.) கூப்பிய கையினர் கோட்டிய சென்னியர் என்னும் பகுதிக்குக் கையைக் குவித்துச் சென்னியை வளைத்து எனப் பொருள் கூறினாம். முருகாற்றுப்படையில் "குழலன், கோட்டன், குறும்பல்லி யத்தன்" என்னும் பகுதிக்கு குழலையூதிக் கோட்டைக் குறித்து" என எச்சமுற்றாகப் பொருள் கூறியதை நோக்குக. வெள்ளம் - ஓரெண். தேம்பல் - வருந்தல். செத்து - உவமவுருபு. காம்பு - மூங்கில். மாயம் - வஞ்சனை. அரிது ஈண்டின்மைமேற்று. மெய்ப்பாடு : மருட்கை. பயன் : தலைமகளதருமை யுணர்தல்.

(82)