பக்கம் எண் :

களவுப் படலம்959

பாங்கியை அறிதல்

அஃதாவது தலைவியின் அருமை அறிந்து வருந்தாநின்ற தலைமகன் ஆயத்தினடுவட் செல்கின்ற கிழத்தியை நோக்க அந்நிலைமைக்கண் ணவளும் இக்கூட்டம் இவளுக்கும் புலனாங்கொலென வுட்கொண்டு ஏனையரைப் போலன்றித் தன்னுயிர்ப் பாங்கியரைப் பல்கானோக்கக் கண்ணுறீஇ இவள்போலும் இவட்குச் சிறந்தாள், இதுவும் எனக்கோர் பற்றுக்கோடாமென வுட்கொண்டு அவளுயிர்ப் பாங்கியை அறியா நிற்றல்.

 திருவரு மாறுரு வாய்விளை யாடுநஞ் செய்கையென்ன
 இருவரு மோருயி ரேயல்ல தில்லென் றியம்பினவால்
 குருவரு வாளரி சிந்திக் கரிகுழைத் திட்டவைவேற்
 பொருவரு நீள்விழி தாங்களு மொன்றெனப் புக்குழன்றே.

(இ - ள்.) நிறம் வளருகின்ற ஒளிபொருந்திய செவ்வரி கருவரி சிதறப்பெற்று மையினைக் குழைத்திடுதல்பெற்ற கூர்மைபொருந்திய வேற்படையினை யொக்கும் நீண்ட விழிகளாகிய தாங்களும் (தலைவி விழி பாங்கி முகத்தும் பாங்கிவிழி தலைவி முகத்தும்) ஒன்றேயென்று (கண்டார் கூறும்வண்ணம்) புகுந்து சுழலல்செய்து அழகு வளருகின்ற ஆறு வடிவாய் விளையாட்டினைச் செய்யும் நஞ்செயலை ஒக்கும் எனக் கண்டோர் கூறும்வண்ணம் (தலைவியும் பாங்கியுமாகிய) இவ்விருவரும் ஓருயிரே யாவர் அல்லாமல் வேறில்லையென்று சொல்லின
வென்க.

(வி - ம்.) வை - கூர்மை. குரு - நிறம். வாள் - ஒளி. அரி - கருவரி, செவ்வரி. கரி - மை. பொருவரும் - ஒப்பில்லாத. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : ஆற்றாமை நீங்குதல்.

(83)

இதுகாறும் இயற்கைப் புணர்ச்சிமுற்கூறி அதன் பின்னர்ப் பிரிதலும் பிரிதனிமித்தமுமாகிய அத்துறைப்படுவன வெல்லாம் தொகுத்துணர்த்தினார். அவையாவன : "முன்னிலை யாக்கல், சொல்வழிப் படுத்தல், நன்னய முணர்த் தனகைநனி யுறாஅ, தந்நிலையறிதல், மெலிவுவிளக்குறுத்தல், தன்னிலை யுரைத்தல், தெளிவகப் படுத்தலென் றின்னவை நிகழு மென்மனார் புலவர். "இவையாமாறு கண்டுகொள்க.

வேறு

இடந்தலைப்பாடு

 மணந்திவ் வாறு மகிழ்ச்சி தலைக்கொளீஇத்
 தணந்த வேலவன் றாங்கருங் காதலால்
 அணர்ந்த பாம்பி னரும்பவிழ் காந்தள்சூழ்
 புணர்ந்த பூம்பொழிற் போதுதன் முன்னினான்.

(இ - ள்.) இங்ஙனமணத்தல் செய்து மகிழ்ச்சி மேற்கொண்டு நீங்கிய வேற்படையையுடைய தலைவன் பொறுத்தற்கரிய காதலினாலே வாயினையங்காத்தல் செய்த பாம்பின் வாயினைப்போல அரும்புகள் மலர்கின்ற காந்தட்செடிகள் சூழ்ந்த முன்னர்க்கூடிய பொலிவுபெற்ற பொழிற்கண் செல்லுதலை நினைந்தா னென்க.

(84)