பக்கம் எண் :

960தணிகைப் புராணம்

கோவைக் கலித்துறை
வழிநிலைப் புணர்ச்சிக்கு வள்ளல் சேறல்

அஃதாவது பின்னர் நிகழும் புணர்ச்சிக்குத் தலைவன் விரும்பி நெஞ்சமே முன்பு தோளினை யறியாதிருந்தும் அளித்தாளிடத்துச் செல்லின் கலந்தல்லாமல் மீளாமெனக் கூறாநிற்றல்.

 வாளாங் கிருப்பினுந் தன்னருள் சேர்ந்துயிர் வாழ்வுபெறத்
 தாளாங் குறுக்குந் தலைவனை நாடிற் றகைவுமுண்டே
 தோளாங்கு முன்பறி யாதளித் தாள்வயிற் றுன்னிநிற்பின்
 மீளாங் கலந்தன்றிச் சேறுநெஞ் சேவள்ளி வெற்பிடத்தே.

(இ - ள்.) நெஞ்சமே வள்ளிமலையின்கண் தோளினை நந்தன்மை யறியாத காலத்தே அளித்தவள்பாற் பொருந்திநிற்பின் (அவளைக்) கூடி யல்லது மீடலிலம் ஆதலால் ஆண்டுச் செல்வோம். வாளாவிருப்பினுந் தன்னருள் கலந்து உயிரானது வாழ்வினையடை (தனுகரண புவன போகங்களை) அஞ்ஞான்றே கொடுக்குமிறைவனை விரும்பிற் றடையு முளதோ வென்க.

(வி - ம்.) துன்னி நிற்பின் கலந்தன்றி மீளாமென்க. சேறும் - செல்வோம்; தன்மைப்பன்மை. தாளாங்குறுக்கும் - அப்பொழுதே (தனு முதலியவற்றை) சேர்க்கும் முயற்சி. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வழிநிலைப் புணர்ச்சிக்குச் சேறல்.

(85)

கிள்ளைவாழ்த்தல்

அஃதாவது வழிநிலைப் புணர்ச்சிக்குச் செல்பவன் முன்னர் வலப் பக்கமிருந்து கிளி இடப்பக்கஞ் சேறலான் செல்லுஞ் செயல் முடிவுறு மென அக்கிளியை வாழ்த்தல்.

 அந்தா மரைமல ரன்னமன் னாண்முலை யானைநின்றோள்
 கந்தாக யாப்பையென் றேமுந்து பாய்ந்துண்மை காட்டுதலால்
 சந்தார் தணிகைத் தடவரைத் தாழ்சுனைக் காவியினிச்
 செந்தார்ப் பசுங்கிளி வாழிய வூழி சிறக்கநின்றே.

(இ - ள்.) அழகிய தாமரை மலரின்கண்ணுள்ள அன்னப் பறவையை ஒத்த கிழத்தியின் முலையாகிய யானையை நினது தோளைக் கட்டுத் தறியாகக்கொண்டு கட்டுவாய் என்று முன்னர் (வலமிருந்து இடம்பாய்ந்து) உண்மைத்தன்மை வெளியிடுதலான் சந்தனமரங்களார்ந்த தணிகையாகிய பெரிய வரையின்கண் ஆழமாகிய சுனையின்கண்ணுள்ள காவியினைப்போல ஊழிக்காலம் சிறக்கும்வண்ணம் நின்று செவ்விய ஆரத்தினையுடைய கிள்ளை வாழ்வதாக.

(வி - ம்.) கந்து - கட்டுத்தறி. யாத்தல் - கட்டுதல். இந்திரனாற் றணிகைவரையின் இடப்பட்ட காவிபோல நீடூழி வாழ்கவென்க. தார் - கிள்ளையின் கழுத்திலுள்ள ஆரம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : கிள்ளை
வாழ்த்தல்.

(86)