பக்கம் எண் :

களவுப் படலம்961

முன்னிய துயரொடு மின்னிடை நிற்றல்

அஃதாவது இயற்கைப் புணர்ச்சிப் பின்னர் நெஞ்சும் நிறையும் தடுமாறி இனிச் செயற்பாலதியாதென்றும் ஆயத்துள்ளே வருவான் கொல் என்னும் அச்சங்கூரவும், வாரான்கொல் என்னும் காதல்கூரவும் நினைத்த துன்பினோடு தலைவி
நிற்றல்.

 புலம்பிய வென்னிலை நோக்கிக் கவர்படு புந்தியொடும்
 வலம்படு தோள்வள்ள லாங்கே கவலுங்கொல் வண்சிறைப்புள்
 சிலம்பிய சோலை புகுங்கொலென் றென்னுளந் தேம்புதலால்
 நலம்பட வெண்ணிய தெய்தரி தாங்கொ னளிவரைக்கே.

(இ - ள்.) இப்பெரிய மலையின்கண் தனித்தவெனது நிலையினைக் கருதிக் கவர்த்தல் செய்கின்ற புந்தியினோடு வெற்றி பொருந்திய தோளினையுடைய வள்ளற்றன்மை யுடையான் அவ்விடத்து வருந்துவன் கொல்லோ, வளவிய சிறையினையுடைய பறவைகள் ஒலிக்கின்ற இச் சோலையின்கட் புகுவான் கொல்லோ வென்று எனதுள்ளம் வருந்துதலான் (நாம்) புணரவெண்ணியது அடைய அரிதாகுங் கொல்லோ.

(வி - ம்.) வரைக்கு : வேற்றுமைமயக்கம். புலம்பு - தனிமை. நளி - பெருமை. கவர்படு - பிளவுபட்ட. வலம் - வெற்றி. சிலம்பல் - ஒலித்தல். தேம்பல் - வருந்தல். நலம்படல் - ஈண்டுப்புணரல்.மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : துயரொடுநிற்றல்.

(87)

பயில்பொழிலவளெனப் பையுணீங்கல்

அஃதாவது தான் கிழத்தியைக் கண்ணுற்று இயற்கைப் புணர்ச்சி யெய்திய தலைமகன் வழிநிலைப் புணர்ச்சிக்குச் சென்றவன் அவளைக் கூடிய பொழிலைக் கண்டு அவளாக நினைத்துத் துன்பம் நீங்கல்.

 தீம்பா லடியிற் கிடத்திய நீலந் திகழ்வதுபோற்
 காம்பா லியன்ற பெரும்பணைத் தோளிதன் காமருருக்
 கூம்பா வளத்த பொழின்முழு தாய்நனி கூரிடும்பை
 ஓம்பா வளிசுரக் கின்றது வள்ளி யுயர்வரைக்கே.

(இ - ள்.) உயர்ந்த வள்ளிமலையிடத்துத் தீவியபாலினடியிற் கிடக்கச் செய்த நீலம் (தன்னொளியால் பான் முழுதும் தன்னிறமாம் வண்ணம்) விளங்குவதுபோல மூங்கிலான் இயன்ற பெரிய பருத்த தோளினையுடையாள் (கண்டார்க்கு) விருப்பம் வரத்தக்க வடிவம் குறையாத வளப்பத்தினையுடைய பொழின்முற்றுமாகி மிகுந்த எனது துன்பினைநீக்கிக் கருணையைப் பெருக்காநின்ற தென்க.

(வி - ம்.) பாலின்கண் நீலமணியைப் பதிப்பின் பாலி்ன் வெண்மையை நீக்கித் தன்னொளியே மிக்குத் தோன்றுவதுபோல இவளுடலின் ஒளி பொழிலின் எழிலைத் தன்னகப்படுத்தி மிக்குத் தோன்றாநின்றதென்க. இதனைக் "கறந்த பாலினுட் காசி றிருமணி" என்னும் சிந்தாமணிச் செய்யுளா னறிக. காம்பு - மூங்கில். காமர் - விருப்பம் வரத்தக்க ; ஓம்பா - நீக்கி. வரைக்கு : வேற்றுமைமயக்கம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : பையுணீங்கல்.

(88)