பக்கம் எண் :

962தணிகைப் புராணம்

மாதுதன்மை யீதெனக் கிளத்தல்

அஃதாவது வழிநிலைப் புணர்ச்சிக்குச் செல்பவன் பொழிலின்கட் டலைவியைக் கண்ணுற்று இத்தன்மையை யுடையளெனக் கருதுதல்.

 காட்சிப் பொருளுங் கருத்துப் பொருளுங் கருத்தடங்கும்
 ஆட்சிப் பொருளு மகற்சிப் பொருளு மடுப்பினங்கே
 மீட்சிப் பொருளு மெனநிற்ற லாற்கொன்றை வேய்ந்தமுக்கண்
 மாட்சிப் பொருளைத் தெரிப்பது வள்ளி வரைப்பொருளே.

(இ - ள்.) வள்ளிமலையின்கண்ணுள்ள இத்தலைமகளாகிய பொருள் காண்டலளவையா னுணரத்தக்க பொருளாயும், வழியளவையா னுணரத்தக்க பொருளாயும் (ஆன்மாக்கள்) எண்ணங்களெல்லாம் கீழடங்கத்தக்க ஆளுதலுடைய பொருளாயும் (தன்பாற் காதலிலார்க்கு) சேய்மைக்கண்ணுள்ள பொருளாயும் (தன்பாற் காதலுடையார்) பொருந்தின் அப்பொழுதே (சேய்மைக்கண்ணின்று அண்மைக்கண்) மீளும் பொருளாயும் நிற்குமென்று சொல்லும்வண்ணம் நிற்றலான் கொன்றைமாலையை வேய்ந்த முக்கண்ணினையுடைய (இவ்விலக்கணங்கள் ஒருநிலைக் களத்தமையப்பெற்ற) மாட்சிமைமிக்க பொருளாகிய இறைவன் றன்மையைத் தெரிவிப்பதா மென்க.

(வி - ம்.) காட்சி - காண்டலளவை. இதனைப் பிரத்தியக்க பிரமாணமென்பர். கருத்துப் பொருள் வழியளவையா னுணரப்படும் பொருள்; வழியளவை - அனுமானப் பிரமாணம். கருத்தானது அடங்கத்தக்க ஆட்சிப்பொருள் சிவம். அகற்சிப் பொருள் - சேய்மைக்கண்ணுள்ள பொருள். மீட்சிப்பொருள் - சேய்மைக்கண்ணின்று நீங்கி அண்மைக்கண்ணுளவாம் பொருள்; சிவம். வள்ளிவரைப் பொருள் அம்மையார். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : மகிழ்தல்.

(89)

தனிநிலைகண்ட மனமகிழ்வுரைத்தல்

அஃதாவது பொழிலின்கட் டனிமையாகநின்ற தலைமகளைக் கண்ட தலைமகன் தன்னை யெதிர்ப்பட்ட நிலையினை உவகை உற்றுரைத்தல்.

 உருவிளக் கூர்நுதற் றோட்டி விழிக்கய லொண்கொடிற்றுத்
 திருவிளக் காடிமென் றோண்முழ வாரத் திரட்கவரி
 குருவிளக் கேர்முலைக் கும்ப மயிரொழுக் குக்கொடியென்
 றிருவிளக் கெண்மங் கலத்தொடு மாதெதிர் கொண்டனளே.

(இ - ள்.) வடிவம் விளக்காகும். பசலையூர்ந்த நுதல் தோட்டியாம். விழி கயலாம். ஒளிபொருந்திய கபோலம் அழகை விளக்குகின்ற கண்ணாடியாம். தோள் முழவமாம். முத்துமாலை திரண்ட மயிர்த் தொகுதியுடைய சாமரையாம். நிறத்தை விளக்குகின்ற அழகியமுலை கும்பமாம். மயிரொழுக்குக் கொடியாம் என்று சொல்லப்படுகின்ற பெரிய விளக்கமாகிய எண்வகைப்படும் மங்கலப் பொருளோடு இத் தலைவி எதிர்கொண்டன ளென்க.

(வி - ம்.) உரு - வடிவம். ஊர் - பரவிய. நுதல் - நெற்றி. தோட்டி - அங்குசம். கொடிறு - கன்னம். ஆடி - கண்ணாடி. தோளாகிய