பக்கம் எண் :

968தணிகைப் புராணம்

(இ - ள்.) கலையானது (அஃகியகன்ற நுண்ணறிவான்) ஆராயுந் தோறும் ஆராயுந்தோறும் இன்பினைத் தராநிற்கும். வள்ளற்றன்மையை யுடைய இறைவன் கழல்கள் அவ்விடத்து அறிவு மாய்தலாகிய தற்போதத்தினை இழக்குந்தோறும் இழக்குந்தோறும் இன்பினைநல்கும். சந்தனக் கட்டையானது தேயுந்தோறும் தேயுந்தோறும் இன்பினை நல்கும். (இவைபோல) தேன்றுளைக்கின்ற மலரையணிந்த கூந்தலை யுடையாளே நின்னை யான் முயங்குந்தோறும் முயங்குந்தோறும் (ஒருவருக்கும்) கிடையாத பேரின்பம் மிகுந்திடுமென்க.

(வி - ம்.) அறிவுமாய்தல் - தற்போதமிழத்தல். வள்ளல் ஈண்டிறைவன். சந்து - சந்தனக்குறடு. மெய்ப்பாடு : உவகை. பயன் : நயத்தல்.

(100)

தீராத் தேற்றம்

அஃதாவது அங்ஙனம் புணர்ந்த தலைவன் எஞ்ஞான்றும் பிரியாமைக்குக் காரணமாகத் தெய்வத்தோடு சார்த்திக் கூறித் தெளிவித்தல்.

 முருகிய றாமரை மாதரு நாணமுன் னோனிடத்துப்
 பெருகிய காதற் பிராட்டியு மெச்சநிற் பேணியென்றும்
 உருகிய வன்பி னுடங்கமர் வேனுறு சான்றளிதேன்
 பருகிய காவி வரைவா ழறுமுகப் பண்ணவனே.

(இ - ள்.) நறுமணத்தைத் தன்னியலாகக் கொண்ட தாமரையின் கண் வாழும் தேவியரும், முன்னைப் பழம் பொருட்கு முன்னோனாகிய இறைவனிடத்துப் பெருகுகின்ற அன்பினையுடைய தலைவியாகிய அம்மையாரும் வியக்க நின்னைப் பேணுதல்செய்து எக்காலத்தும் மேன் மேற்கதிக்கின்ற அன்போடு ஒருசேரத் தங்குவன். (இதற்கு) மிக்கசான்று வண்டுகளானவை தேனை உண்ணுகின்ற காவி மலையின்கண் ணெழுந் தருளியிருக்கின்ற அறுமுகத்தையுடைய தேவனாவா
னென்க.

(வி - ம்.) இயல் - இலக்கணம். முன்னோன் - யாவருக்கும் முன் றோன்றிய இறைவன். பிராட்டி - தலைமையுடைய உமையம்மையார். மெச்ச - வியக்க. உடங்கு - ஒருசேர. அமர்தல் - தங்குதல். உறு - மிக்க. சான்று - சாட்சி. காவிவரை - தணிகைமலை. பண்ணவன் - தேவன். மெய்ப்பாடு : உவகை. பயன் : தெளிவித்தல்.

(101)

ஆயத்துய்த்தல்

அஃதாவது நின்னிற் பிரியேன் பிரியினாற்றேன் எனச் சூளுற்ற தலைமகன் இனிப் பல சொல்லியென் ஒன்றுபட்டிருக்கின்ற நின்னுடல் உயிராக என்னுயிருடலாகி பொன்றிணிஞாலத்தன்றி இம் மண்டிணி ஞாலத்துப் பொருந்தின. இனி நின்னாயம் வளம்பெற ஆயத்தினிடத்துச் சேர்வாயாக வெனக்கூறல்.

 கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்ப் பசுங்க திர்ப் பொற்றொடியாய்
 ஒருங்கிய நின்னுட லாருயி ராவென் னுயிருடலாப்
 பெருங்கடல் சூழ்ந்த விடத்தும் பிணைந்தன பேசுவதென்
 மருங்கிய லாயம் புகுதக வாயம் வளம்பெறவே.