| (இ - ள்.) கரிய கூந்தலினையும், வெள்ளிய நகையினையும் செய்ய வாயினையும், பொன்னாலாகிய தொடியினையும் உடையவளே, (சேறும் நீரும்போல) என்னுடலொன்றுபட்டிருக்கின்ற நின்னுடல் என்னரிய உயிராக, எனதுயிர் நின்னுடலாகப் பெரிய கடல்சூழப்பெற்ற (பொன் னுலகத்தேயன்றி) இம்மண்ணுலகத்தும் ஒன்றுதலுற்றன. யான் சொல்லத்தக்கது யாதுளது. ஆதலான் ஆயக்கூட்டம் (உன்னால்) வளமுறும்வண்ணம் பக்கலில் இயல்கின்ற ஆயத்தின்கண் புகுவாயாக வென்க. (வி - ம்.) மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : பிரியலுறுந்தலைமகன் வற்புறுத்தல். (102) பிரிபவனோக்கி அருமை கண்டழுங்கல் அஃதாவது, ஆயத்துய்த்துப் பிரியும் தலைமகன் கடனடுவண் நால்வகைப் படையாற் சூழப்பெற்ற சூரனகரத்துச் சிறையின்கட்பட்ட தேவரை மீட்பனையொரு பொருளாக மதித்திலம் யானைக் கொம்பாகிய வேலியாற் சுற்றப்பெற்ற சீறூரின்கண்ணுள்ள மாது அருமையாவள் என யாம் வருந்துகின்றேம் எனக் கூறாநிற்றல். | | திரைதவழ் நீர்க்கட னாப்பட் செலற்கரு நாற்படையின் | | | நிரைதவழ் நொச்சிச் சிறையகத் தும்பரை நேர்ந்துகொளற் | | | குரைதவழ் நெஞ்ச மதித்தில மும்ப லுலவைசுற்றூர் | | | வரைதவ ழாயத்து மாதரி யாளென்று மாழ்குதுமே. |
(இ - ள்.) அலைகள் ஊர்ந்து செல்கின்ற நீர் நிறைந்த கடலினடுவண் நால்வகைப் படையின் கூட்டங்கள் பொருந்தியுள்ள மதிலோடு கூடிய சிறையின்கண்ணுள்ள தேவர்களை (சிறையினின்றும்) மீட்டுக் கோடற்கு (பகைவராற்) புகழுரை பொருந்திய நெஞ்சால் அருமையா மெனக் கருதி மதித்தேமல்லேம். யானைக்கொம்பாகிய வேலியாற்சுற்றியுள்ள சீறூரின்கண்ணுள்ள மலைகளின் அச்சமின்றி இயங்குகின்ற ஆயக்கூட்டத்தின்கண்ணுள்ள இப்பெண்ணானவள் இனிக் காண்டற் கரியாளென யாம் வருந்துகின்றேம். இஃதொரு புதுமையாயிருந்தவா றென்னோ வென்க. (வி - ம்.) நொச்சி - மதில். சூரன் தலைநகர் கடலின் மத்தியிலுள்ள தென்க. நாற்படையினையுடைய நொச்சியெனக் கூட்டுக. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அழுங்கல். (103) பிரிபவனுரைத்தல் அஃதாவது பிரிதலுறுந் தலைமகன் வெள்வெளியிடத்துளளாய் என் கட்புலன் சென்று கதுவுமாயின் வருந்தத்தக்க கவலையின்று, அங்ஙனமின்றி என் எண்ணம் அவள் வடிவாய் நிற்குமாயின் மரக்கலமிழந்தார் செயல்போல வருத்த மிகுதியாமெனக் கூறாநிற்றல். | | திருத்தகு மாது புறத்தவ ளாய்விழி சென்றுபற்றின் | | | உருத்தகு காமக் கவலையொன் றில்லை யொழிந்தெனது |
|