| | கருத்தவ ளாய்நிற்கு மேற்கலன் மாய்த்தவர் கையறைபோல் | | | வருத்தமிக் காகின்ற தாலென்ன மாயம் வரையகத்தே. |
(இ - ள்.) பேரழகு தக்கிருக்கின்ற இத்தலைவி (என்கட்புலன் கதுவும் வண்ணம்) புறத்தில் நிற்பவளாய் என்கட்புலன் சென்று பற்றுமாயின் வருந்துதற்கேதுவாகிய ஆசையான் வரும் கவலை சிறிதுமில்லை. (அவள் புறத்தினிற்றலை) நீங்கி என் கருத்தின்கண் மறைந்தவளாய் (வெளிப்படாது) நிற்பாளாயின் (சரக்கேற்றிய) மரக்கலத்தினை (கடனடுவண்) கேடுறச்செய்யும் (வணிகமாக்கள் அடையும்) துன்பம்போல இவ்வள்ளிமலையிடத்து வருத்த மிகுதியாகின்றது. இஃதென்னை மாயமோ வறியே னென்க. (வி - ம்.) கையறை - துன்பம். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை கூறல். (104) வேறு இதுகாறும் இயற்கைப் புணர்ச்சிப் பகுதியும், அதன் வழித்தோன்றும் வழிநிலைப்புணர்ச்சிக்குரிய தாமே கூடும் இடந்தலைப்பாடும் கூறினார். தோழியிற் கூட்டம்போலப் பாங்கன் உள்நாடி இடை நின்று கூட்டாமையால் தலைமகன் பாங்கனைக்கூடும் கூட்டம் மூவகைப்படும். இவற்றை மெய்தொட்டுப் பயிறல் முதலடியையுடைய தொல். களவியல் 102ஆவது சூத்திரத்துள் "இருநான்கு கிளவியும் என்னுந் துணையும், இடந்தலைப்பாடும், வாயில் பெட்பினும் என்னுந்துணையும், பாங்கனாலாகும் இடந்தலைப்பாடும், ஒழிந்தன தோழியிற் கூட்டமா மாறுங் காண்க" என நச்சினார்க்கினியர் விளக்கியது காண்க. | | இடந்தலைப் பட்டிவ்வா றியற்றி நீங்கிய | | | உடம்பிடித் தடக்கையுத் தமனற் பாங்கனான் | | | இடந்தலைப் படுதன்மே லியற்ற வைத்திடை | | | தொடர்ந்துபல் விம்மிதந் தோற்ற முன்னினான். |
(இ - ள்.) இயற்கைப் புணர்ச்சிப் பின்னர் தலைவன்தானே வழிநிலைப் புணர்ச்சிக்குச் செல்லுமிடத்தின்கட் டலைப்பட்டு மேற்கூறிய செயல்களை நிகழ்த்தி நீங்கிய வேற்படையையுடைய உத்தமனாகிய தலைவன் மேல் நல்ல பாங்கனால் இடந்தலைப்படும் செயலைப் பின்னர் நிகழ்த்தவைத்து இடையின்கண்ணே பல ஆச்சரியங்களைத் தோன்றச் செய்யத் திருவுளங்கொண்டன னென்க. (வி - ம்.) உடம்பிடி - வேல். விம்மிதம் - ஆச்சரியம். (105) | | வள்ளியை மணந்தவவ் வடிவு நீங்கினான் | | | தெள்ளிய வேறொரு சிலம்ப னாயினான் | | | கொள்ளைமான் வேட்டையிற் குறுகு வானென | | | ஒள்ளிய தினைப்புன முற்று நண்ணினான். |
(இ - ள்.) வள்ளியம்மையாரைக் கூடிய அவ்வுருவினை நீங்கினான் தெளிவு பொருந்திய மற்றொரு குறிஞ்சிநிலத் தலைவனானான். கூட்ட |