பக்கம் எண் :

974தணிகைப் புராணம்

(அக்கணியைப்) பொருந்தினளாய் அதன் கிளையின் கண்ணே ஏறி வாசனையுள்ள மலர்களைக் குற்றுத் தன் குழலின் கண்ணே வேய்ந்து அழகிய தழையினைப் பறித்து அல்குலின் கண்ணே அணிந்தனளென்க.

(வி - ம்.) மலைவாழ்நர் வேங்கை முதலிய மரங்களின்றழையை ஆடையாக வல்குலிற்சேர்த்தல் மரபாகலான் "அந்தழை வாங்கினளல்குல் சேர்த்தினாள்" என்றார்.

(116)

 அலத்தக மலர்ந்தசீ றடிக டோயவும்
 மலர்த்தகைத் தொடிக்கரந் தழுவி வௌவவும்
 நலத்தகு பரிமள நகில்கள் புல்லவும்
 நிலத்தலைப் பேரின்ப நிமல னீடினான்.

(இ - ள்.) செம்பஞ்சுக் குழம்பூட்டியதாய் ஒளி விரிந்த சிறிய தன்னடிகள் (அக்கணியினிடத்து) பொருந்தவும், மலர்போன்ற தகைமையினையுடைய வளையணிந்த கைகள் (அக்கணியினை) அணைந்து பற்றவும், நன்மையைத் தரத்தக்க நறுமணத்தினையுடைய தனங்கள் (அக்கணியினிடத்து) தழுவவும், மண்ணினிடத்தும் பெரிய இன்பினை மலமற்றவனாகிய இறைவன் மிகுதியுமெய்தின னென்க.

(வி - ம்.) அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. மலர்த்தகை - மலர் போன்ற தன்மையையுடைய. நகில்கள் - தனங்கள். நீடுதல் - அதிகரித்தல்.

(117)

 விம்மிதம் பலபல விளைத்து நிற்றலின்
 செம்மலங் கணியினைத் தீர முன்னலள்
 பைம்மயி லெனவதிற் பயிறன் மேயினாள்
 அம்மர மணைத்தெழு கொடியு மாயினாள்.

(இ - ள்.) தலைமையினையுடைய அழகிய வேங்கைமரம் பலப்பல ஆச்சரியங்களை அம்மையாருக்குளவாக்கி நிற்றலால் அவ்வேங்கையை நீங்கக் குறித்தாளில்லை. பசிய மயிலென்று சொல்லும் வண்ணம் அக்கணியில் பயின்றாடலைச் செய்தனள். அக்கணியினைப் புல்லி யெழுகின்ற கொடிபோலவுமாயின ளென்க.

(வி - ம்.) உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. செம்மலாகிய அழகிய கணியை என்றுமாம்.

(118)

 கிளிமயில் குயில்புறாக் கேழ்த்த பூவைகள்
 அளியினஞ் சேவலோ டாடி நீங்கவும்
 களிவரக் காட்டினன் கண்டு நெஞ்சகம்
 விளிவருங் காமநோய் மிடைய மெல்கினாள்.

(இ - ள்.) கிளியும், மயிலும், குயிலும், புறவும், நிறத்தினையுடைய நாகணவாய்ப்புள்ளும், வண்டினமும் தத்தஞ் சேவல்களோடு கூடி நீங்கவும் களிப்புண்டாகச் செய்தனன். (அங்ஙனம் அவைகள் கூடி நீங்குதலைக்) கண்டு மனமானது கெடுதலற்ற ஆசையாகிய நோய் அதிகரிக்க வருந்தினளென்க.