பக்கம் எண் :

976தணிகைப் புராணம்

 விளைமுதிர் விருத்தனாய் விழைவு காட்டுவான்
 மிளைவயி னவ்வுரு மேவி னானரோ.

(இ - ள்.) முருகனென்னும் வடிவினை நீங்கி வேட்டுவர்களுக் காதாரமாகிய காளைப்பருவ முடையனாய்க் காட்சிகொடுத்தவன் விளைவுற்று முதிர்ச்சியடைந்த கிழவடிவுடையவனாய் விருப்பினைக் காட்டும் பொருட்டுக் காவற்காட்டினிடத்து அக்கிழ வடிவைப் பொருந்தின னென்க.

(வி - ம்.) இளையவன் : முருகன். களைகண் - புகலிடம். விளைமுதிர் விருத்தன் : வினைத்தொகையடுக்கு. மிளை - காவற்காடு.

(123)

வேறு

 அராவுரியெ னத்திரையு மாக்கைசிலை நேர
 விராவுமயிர் வெள்ளொளி விரிப்பவிமை நால
 உராவிய விழித்துணை யொசிந்தரிது நோக்கத்
 தராதல மழுத்தியிய றண்டுகர மன்ன.

(இ - ள்.) பாம்பின் மேற்றோல்போலச் சுருங்குதலுற்றுள்ள உடலானது (வளைவால்) வில்லையொப்ப (உடன்முழுதும்) கலந்துள்ளமயிர் (நரைத்தலான்) வெள்ளொளியினை வெளியிடாநிற்பக் கண்ணிமைகள் (மூப்பான்) தொங்க, பெயர்ந்த இரண்டுவிழிகளும் தாழ்ந்து அருமையாகப் பார்க்க; பூமியின்கண்ணூன்றி நடக்கின்ற தண்டானது கையின் கண் பொருந்துதல் செய்ய வென்க.

(வி - ம்.) திரையானது பாம்புகழற்றிய உரிபோலிருத்தலின் "அராவுரியெனத் திரையுமாக்கை" யென்றார். விராவுதல் - கலத்தல். நாலல் - தொங்கல். உராவுதல் - (நிலையினின்றும்) பெயர்தல். இயலல் - செல்லல். தண்டு - கைக்கழி.

(124)

 கைத்தசை கவுட்டசை கழற்றசைக டூங்க
 மெத்திய சழங்கலுடை வீழ்ந்துநடை தட்பத்
 தத்தடி யிடுங்கழ றளர்ந்துதடு மாற
 ஒத்தகர னோடுதலை யுங்குலைகு லைப்ப.

(இ - ள்.) கையின்கண்ணுள்ள தசையும், கபோலங்களிலுள்ள தசையும், காலின்கண்ணுள்ள தசையும் (மூப்பின் மிகுதியால்) தொங்குதல் செய்ய, (இடையின்கண்) நிறைந்த (மூப்பான்) உலைந்த உடையானது கீழே வீழ்ந்து நடையினைத் தடுப்பத் தாவித்தாவி அடியிடுகின்ற கால் தளர்தலுற்றுத் தடுமாற்றமடையத் தம்முளொத்த கைகளோடு தலையும் நடுங்குதல் செய்ய வென்க.

(வி - ம்.) மெத்திய - நிறைந்த. சழங்கலுடை - உலைந்தவுடை.

(125)

 இடுகிடை மிடைந்தகுர லின்மொழி வழங்கப்
 படுமொழி கொளாதவொரு பண்புசெவி காட்ட
 விடுசுடர் விபூதிமெய் விளங்குறவி ளங்கத்
 தொடுகடவுண் மாமணிக டோளனமுன் னாட.