பக்கம் எண் :

980தணிகைப் புராணம்

தினையுறுவிக்கின்ற பொய்யாகிய பசியைநீக்கி ஒலிக்கின்ற நீர்வேட்கையை யுடையேனெனப் பழைய துன்பத்தான் வருந்தின னென்க.

(வி - ம்.) கேழ் - நிறம். மிசைதல் - உண்ணல். பழங்கண் - துன்பம்; பறைத்தல் - நீக்கல்.

(135)

 இப்புற வரைத்தலை யிகந்துவரை யேழ்போய்
 அப்புற மடுப்பினவ ணுள்ளதொரு தீர்த்தம்
 வெப்புற மிடைந்தபுனல் வேட்கைதணி கென்ன
 மைப்புறவ னாயறிய வல்லனல னென்றான்.

(இ - ள்.) இப்புறத்திலுள்ள வரையிடத்தைக் கடந்து சென்று அப்புறத்திலுள்ள ஏழு மலையினையுங் கடந்து அப்புறத்தே செல்லின் அவ்விடத்துள்ளது ஒப்பற்ற தீர்த்தம். நீ வெப்பமுறப் பொருந்திய நீர்வேட்கை தணிவாயாகவென்று சொல்ல கரிய புறவினை யொத்தவளே (அத்தீர்த்தத்தினை) நான் அறியவல்லவ னல்லனென்றா னென்க.

(வி - ம்.) வேடமாதர் கருநிறத்தராதலின், "மைப்புறவனாய்" என்றார். மை + புறவு + அனாய். அன்னாய்தொகுத்தல்.

(136)

 துவளிடையி னோடடி துளும்புமென முன்னிக்
 குவளைவிழி யாய்வறிது கூறிவிட லென்றாங்
 கவளுடனெ ழக்கதையி னாதரவு பற்றி
 உவளக மடுப்பதென வொண்சுனைய டுத்தான்.

(இ - ள்.) துவளுகின்ற இடையினோடு அடியும் வருந்துமென்று கருதிக் குவளை மலர்போன்ற விழியினையுடையாய் வீணாகக்கூறி என்னை விட்டுவிடாதிருப்பாயாக வென்று சொல்லி அம்மையாருடன் செல்லத் தண்டத்தினை ஆதாரமாகக்கொண்டு அந்தப்புரத்தை யடுப்பதைப்போல ஒள்ளிய சுனையை யடுத்தன னென்க.

(வி - ம்.) துளும்பல் - வருந்தல். வறிது - வீண். உவளகம் -
அந்தப்புரம்.

(137)

 நிச்சமு நினக்குரிய நீர்ச்சுனையி தேகொல்
 முச்சகமு முத்தொழிலு மும்மலமு மல்ல
 விச்சென வெறுத்தவரு மேவரிய தென்றே
 நச்சிநறு நீர்நளின நன்கைகொடு துய்த்தான்.

(இ - ள்.) நீ நாடோறும் நீராடற்குரிய நீரையுடைய சுனை இதுதானோ, மூவுலகமும், ஆக்கல், அழித்தல், காத்தல் என்னும் மூவகைத் தொழில்களும், ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்களும், முத்தியைப் பெறுதற்குரிய விதையல்ல வெனக் கருதி வெறுத்த பேரறிஞரும் பொருந்துதற் கரியதென்று கூறி விரும்பி (அச்சுனையின் கண்ணுள்ள) நல்ல தண்ணீரைத் தாமரைமலர் போன்ற நல்ல கையால் அள்ளிப் பருகினானென்க.