பக்கம் எண் :

982தணிகைப் புராணம்

(வி - ம்.) மேதை - பேரறிவு. விருத்தர் - வேறுபாடுடையவர். காது - மோதுதல். மாதர் - காதல். மகார் - பிள்ளைகள்.

(141)

 ஆய்தவடி விற்கணொரு மூன்றவிரு மண்ணல்
 தூயவளர் வேடமொடு தோற்றுதிநீ வாழி
 நேயமலி மெய்யடியர் நேர்ந்துழியு நின்போல்
 மாயமென வெள்ளுமொரு வான்பழியும் வைத்தாய்.

(இ - ள்.) ஆய்தவெழுத்தின் வடிவம்போல ஒப்பற்ற மூன்று கண்கள் விளங்கும் தலைவனது தூய்மை வளர்கின்ற வேடத்தோடு காணப்படுகின்றாய். ஆதலால் வாழக்கடவாய். இறைவன்பால் அன்புமலிந்த உண்மையடியார்கள் நேர்ந்த காலத்தும் (அவர்களையும்) நின்னைப் போன்ற வஞ்சக வடிவமுடையவரென இகழத்தக்க மேலாகிய பழியையும் உளவாக்குகின்றாய் என்க.

(வி - ம்.) ஆய்தம் - ஆய்தவெழுத்து. தலைவன் - சிவபெருமான். வாழி - அசையுமாம். மாயம் - பொய். வான் - பெருமை.

(142)

 உரைத்தமொழி நாவினை யொறுப்பலெழி னோக்கும்
 புரைத்தவிழி சூன்றிடுவல் புந்திதுயர் மூழ்க
 விரைத்திரு கரத்தலம் விழுத்துவ லனைத்தும்
 அரைத்திடுவ லெங்குமிசை யாக்கிடுவ லின்னே.

(இ - ள்.) இப்பொழுதே (இங்ஙனம் வேடத்தினுக்கியையாத) மொழிகளைச் சொல்லிய நாவினை அறுப்பேன். என தழகினைக் (கூர்ந்து) நோக்கும் உயர்ந்த விழிகளைத் தோண்டிவிடுவேன். விரைவாக நின்னிருகைகளையும் (கீழே துண்டித்து) விழச்செய்வேன். உன் உடல் முழுவதினையும் (கற்பாறையில் வைத்து) அரைப்பேன். (யான் தோன்றிய வேட்டுவக் குடியினுக்குச்) சீர்த்தியினை யுளவாக்குவேன்.

(வி - ம்.) அல், அனைத்தும் தன்மை வினைமுற்று விகுதி. விரைந்து, விரைத்தென விகாரம் ஆயிற்று.

(143)

 தேவரினொ ருத்தனலை திண்புவிபு ரக்கும்
 காவலர்க டம்மினொரு காளையனு மல்லை
 ஆவதெனு றுப்பறையி னார்த்தரிய டர்ப்போன்
 சாவவிழு புன்னரி தடிந்ததிற னாமால்.

(இ - ள்.) (வஞ்சக வேடம் புனைந்த நெஞ்சனே) நீ தேவர்களுள் ஒருவனுமல்லை. திண்ணிய புவியினைக் காக்கும் அரசர்களுள் வைத்து ஒரு காளைப்பருவமுடையவனுமல்லை. உனதுறுப்பினை நீக்கின் (என் மாட்டுளதாம் புகழ்) யாதாமென்க. முழக்கஞ் செய்து சிங்கத்தைக் கொல்பவன் சாவும் பொருட்டுக் கீழே விழும் புல்லிய நரியென்னும் விலங்கினைக் கொன்றதை யொக்குமென்க.

(வி - ம்.) காவலர் - அரசர். காளையன் - காளைப்பருவத்தோன். அரி - சிங்கம். புன்னரி - எளியநரி.

(144)