பக்கம் எண் :

களவுப் படலம்983

 வஞ்சியர்க டஞ்சுமனை வாழ்க்கையர்க ளேனும்
 அஞ்சுமுல காள்பவனை யாள்பவனு மஞ்சும்
 விஞ்சமரர் தம்மைமிக வஞ்சுவர்விண் ணோரும்
 நஞ்சணி மிடற்றனை நலக்குமறி வில்லோய்.

(இ - ள்.) நன்மைதரத்தக்க அறிவு சிறிதுமில்லாதவனே, மனைவியர்கள் பற்றுக்கோடாக வாழும் ஆடவர்களாயிருப்பினும் (அவர்கள் பிறர்மனை நயப்பின்) உலகபால ருருவாய் உலகினைக்காக்கும் அரசனுக் கஞ்சுவார்கள். உலகத்தையாளும் இறைவனும் (பிறமனை நயப்பின்) மேலான தேவர்களுக்கஞ்சுவான். தேவர்களும் பிறர்மனை நயப்பின் நஞ்சமழகு செய்த கண்டத்தையுடைய இறைவனுக்
கஞ்சுவார்கள்.

(வி - ம்.) தஞ்சம் - பற்றுக்கோடு. உலகாள்பவன் - மன்னன்.

(145)

 பித்தரு மதித்திஃது பேசுதிறன் வல்லார்
 மைத்துனரு நெஞ்சொருமை வாய்ப்பினல திவ்வா
 றொத்தபடி வாயினழி யாரொருவர் மாட்டும்
 எத்திறநி னைத்தியினி தேகுகடி தென்றாள்.

(இ - ள்.) பித்துப்பிடித்த உன்மத்தருங்கூட இங்ஙனம் பேசுந்திறனில் வல்லமையிலராவர். (இருவர்) நெஞ்சமு மொற்றுமைப்படினல்லால் மைத்துனக் கேண்மையுடையாரும் இவ்வண்ணம் ஒருவரிடத்தும் மனதிற்கொத்த வண்ணங்கூறி வாயானழிந்து போகார். (என்னை) எவ்வண்ணம் நினைத்தாய். இனி (இவ்விடத்தினின்றும்) விரைவாகச் செல்வாயாக வென்றாள்.

(வி - ம்.) வல்லார் - வன்மையிலார். மைத்துனர் - முறைப்பெயர். வாயாலே கெடார் என்க.

(146)

 நெற்றிமிசை முற்றுபுரு வங்கணெளி கிற்பக்
 கற்றையெரி தோய்ந்தகணை யென்னவிழி சேப்ப
 விற்றரள மென்னவெய ராடவுரை தள்ள
 முற்றுடல்வெ திர்ப்பமொழி மாதையிறை பாரா.

(இ - ள்.) நெற்றியின்மீது (இலக்கணங்கள்) முற்றுப்பெற்ற புருவங்கள் நெளியக் கூட்டமாகிய அழலின்கட் டோய்க்கப்பெற்ற அம்பென்று சொல்லும்வண்ணம் விழிகள் சிவக்க ஒளிபொருந்திய முத்துக்கள் என்று சொல்லும்வண்ணம் வெயர்வை நீர்பொருந்த உரைதடுமாற, உடன் முழுதும் நடுங்குதல் செய்ய இங்ஙனமாய மொழிகளை மொழிகின்ற (அம்மையாரை) இறைவனாகிய முருகன் பார்த்தானென்க.

(வி - ம்.) நெளிகிற்ப - நெளிய. சேப்ப - சிவப்ப. வில் - ஒளி. தரளம் - முத்து. தள்ள - தடுமாற. வெதிர்ப்ப - நடுங்க.

(147)