பக்கம் எண் :

களவுப் படலம்985

(இ - ள்.) வருத்தமுற்றுகுகின்ற நெஞ்சமே அருளினிடத்துக் கலத்தல் செய்யின் அமையாத பேரின்பத்திடத்து மூழ்காநிற்ப இடையின் மாயையிற் கலப்பதில்லையதுபோல (தோன்றும் பொருள் யாவும் கெடும், கேடில்லது சிவமென்னும்) தெளிவினிடத்துக் கலந்துள்ள பாங்கனை யானடையில் எவ்வுலகத்தினிடத்தும் வள்ளிநாயகியாராகிய பொருளிடத்திற் கலந்து கொள்வதற்கு ஐயமுளதோ
வென்றானென்க.

(வி - ம்.) இருள் - மாயை. தெருள் - தெளிவு. ஈண்டுபேரறிவு. பொருள் - வள்ளிநாயகியார். மெய்ப்பாடு அசைவுபற்றி வந்த அழுகை. "இளிவே இழவே யசைவே வறுமையென விளிவில் கொள்கை யழுகை நான்கே" என்றாராகலின். தோழியான் முடிக்கலாமெனக் கருதிய தலைமகன் பாங்கனான் முடிக்கக் கருதினான். தம்மவனால் முடியாக் கரும முளவாயினன்றே பிறரைக் குறையுற வேண்டுவது எனக்கண்ணினான்.

(150)

வேறு

 தாற்று வாழைத் தணிகைச் சிலம்பின்முன்
 போற்று மாவச் சகாயனைப் புந்தியின்
 ஆற்று பாங்கனென் றாதரித் துன்னலும்
 தோற்றி னானவர் சொற்கள் வழங்குவார்.

(இ - ள்.) குலைகளையுடைய வாழை மரங்களுடன்கூடிய தணிகை மலையின்கண் முன்னர்த் தன்னால் புகழப்பட்ட ஆவச்சகாயனென்னும் மூத்த பிள்ளையாரை மனதின்கண் (துன்பினைத் தணித்தற்குரிய) பாங்க னென்று விரும்பி நினைத்த வளவில் அவன் தோன்றினான். அவ்விருவருந் தம்முள்மொழி வழங்குவாராயின ரென்க.

(வி - ம்.) தாற்றுவாழை - குலைவாழை. சிலம்பு - மலை. புந்தி - நெஞ்சம். ஆதரித்து - விரும்பி. அவர் - அவ்விருவரும்.

(151)

வேறு

பாங்கன் தலைவனை வினாதல்

அஃதாவது தன்னைக் கண்ணியதையறிந்து கண்ணியாங்குத் தோன்றிய பாங்கன் அடியிற்கொண்டு முடிகாறும் நோக்கி நீ குழவிப்பருவத்துச் செயற்கருஞ் செயல் செய்த காலத்தும் இன்னலுற்றாயல்லை. அவுணர் திரளைச்சாய்த்த காலத்துந் துன்புற்றாயல்லை. வாளாவிருக்குங் காலத்து வேலவனே அயர்வுறக் காரணமென்னை கூறுவாயாகவெனல்.

 முன்னே குழவியி னாட்டயர் கான்முடி வானவரைக்
 கொன்னே குமைத்தவஞ் ஞான்றுங் குழைவிலை கொற்றமுற்றப்
 பின்னே யவுணத் திரள்சாய்த் துழியுமொர் பிழையில்லை
 என்னே வறிதமர் ஞான்றயர் வேந்திலை வேலவனே.

(இ - ள்.) ஏந்திய வேற்படையையுடையவனே முன்னர்க் குழவிப் பருவத்து விளையாட்டினை இயற்றுங்கால் முடியினையுடைய தேவர்களை வீணே அழித்த காலத்தும் நீ வருந்தினாயில்லை. உன்வெற்றி உலகெங்குஞ் சூழப் பின்னர் சூரன் முதலிய அவுணர் திரளினைக்கொன்ற காலத்தும் ஒரு துன்பும் அடைந்தாயில்லை. வாளாவிருக்குங் காலத்து (நின்மாட்டு) அயர்வுளதாதற்குக் காரணமென்னையோ யானறிந்தில னென்றா னென்க.