| வலியினை யளத்தற்பொருட்டுப் பொருந்த அத்தேவர் குழுவின் நடுவண் நடப்பட்ட ஒப்பற்ற துரும்போ யாமறிந்தில மென்க. (வி - ம்.) மெய்ப்பாடு எள்ளல்பற்றி வந்தநகை. "எள்ளல் இளமை பேதைமை மடனென், றுள்ளப் பட்ட நகைநான் கென்ப" என்றாராகலின். பயன் : கழறுதல். தேவர்களும் அசுரர்களும் போர்தொடங்கினர், அப்போர் வெல்வி தோல்வியின்றி நீண்டகாலம் நிகழ்ந்தது. இதனைக்கண்ட உமையம்மையார் ஒரு குழுவினர் வெற்றியடைய இறைவனை வேண்டினள். அவள் வேண்டுகோட்கிணங்கி தானவர்க்கு வெல்வியுளதாம் வண்ணம் திருவருள் செய்தான். அவர் வெல்வியுற்றனர். தேவர்கள் தோல்வியுற்றுத் துன்புறுதலைக் கண்ட அம்மையார் பின்னர்த் தேவர்கள் வெல்வியுறுமாறு வேண்ட இறைவன் திருவருள் செய்யப் பின்னர்த் தேவர்கள் வெல்வியுற்றனர். அஞ்ஞான்று இந்திரன் முதலிய தேவர்கள் ஒவ்வொருவரும் தானவர்களைத் தாங்களே வென்றதாகப் பெருமைகூறப் பூசலுற்றனர். அஞ்ஞான்று இறைவன் இயக்கவடிவங்கொண்டு அத்தேவர்கள் முன்சென்று அவர்கள் வன்மையை யளக்கும்பொருட்டு துரும்பொன்றினை நடுதல்செய்து இதனைப் பிளந்தவரே தானவரை வென்றவ ரெனக்கூற தேவர்கள் ஒவ்வொருவரும் இத்துரும்பின்மேல் தங்கள் படைக்கலங்களைச் செலுத்தித் தோல்வியுற்றனர். இக்கருத்தை யுட்கொண்டு "இரும்பொன்று தேவர் வலியளப் பானெய்தி நாப்பணட்ட, துரும்பொன்று கொல்லோ" என்றார். இக்கதையினைக் காஞ்சிப்புராணம் அமரீசப் படலத்தானறிக. (154) தலைவன் உளந்தளர்ந்துரைத்தல் அஃதாவது காதற்பாங்கன் கழறவும் கேளானாய்ப் பின்னரும் வேட்கை வயத்தனாய் நின்று நான்கண்ட வடிவினை நீ கண்டாயல்லை. கண்டனையாயிற் கழறாய் என்று அவனோடு மறுத்துரைத்து வருந்தா நிற்றல். | | விண்டா ரமரிற் றிறங்காணி னல்லது மேன்மையெண்ணார் | | | கொண்டார் மனைவி குணங்காணி னல்லது கூட்டமெண்ணார் | | | வண்டார் குழலி வளங்காணி னல்லது வாய்மையெண்ணாய் | | | கண்டா யலைகழ றாநிற்றி யாலென் கருத்தனவே. |
(இ - ள்.) பகைவர் போரின்கண் வன்மையைக்கண்டுழி யல்லாமல் (அவ்வீரன்) உயர்வை ஒருபொருளாகக் கருதார். மனையாளாகக் கொண்ட தலைவர்கள் (அம்மனைவியின்) குணத்தைக் கண்டுழியல்லாமல் கூட்டத்தினை யொருபொருளாகக் கருதார். வண்டினமொய்க்குங் கூந்தலாள் வனப்பைக் கண்டுழியல்லாமல் உண்மையைக் கருதாய். நீ யவளைக் கண்டாயில்லை. என்னை இடித்துரையா நிற்கின்றாய். நின் கருத்தின்கண்ணுள்ளன யாவையோ யானறிந்தில னென்க. (வி - ம்.) வளம் - அழகு. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த வருத்தம்பற்றி வந்த இளிவரல். "மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு, யாப்புற வந்த விளிவரல் நான்கே" என்றாராகலின். பயன் : பாங்கனை யுடம்படுவித்தல். (155) |