| பாங்கன் நிற்பவை நினைந்துரைத்தல் அஃதாவது மறுத்துரைத்து வருந்தாநிற்பக் கண்ட பாங்கன் காமமாகிய நோய் கல்வி செல்வம் முதலியவற்றை அழிக்குங் குணமுடைய தல்லவா, இக்குணம் நினக்குப் பெருமையுடையதன்றெனக் கூறா நிற்றல். | | பெருமையைக் கல்வியைப் பேணுந் தவத்தைப் பிறங்குகின்ற | | | அருமையை மற்று மழிப்பதன் றோவடர் காமவெந்நோய் | | | இருமையை யெண்ணலர் பாலு மிளிவர லேனினக்குக் | | | கருமைய தன்றுகண் டாயண்டர் போற்றுங் கருணையனே. |
(இ - ள்.) இயல்பானமைந்த பெருமைக் குணத்தினையும், பலகால் முயன்று பயிற்சிபெற்ற கல்வியினையும் விரும்பிச் செய்கின்ற தவத்தினையும் விளங்குதலுடைய அருமைக் குணங்களையும் பிறவற்றையும், வருத்துகின்ற ஆசையாகிய வெவ்விய நோய் அழிப்பதல்லவா, (இக் குணமிருத்தல்) இம்மை மறுமை யென்னுமிருமைப் பயனையும், ஒரு பொருளாகக் கருதாத கீழ்மக்கள்மாட்டும் இளிவரலைத் தருமாயின் (இறப்ப உணர்ந்த) உனக்குப் பெருமையுடையதன் றென்றா னென்க. (வி - ம்.) கருமை - பெருமை. மெய்ப்பாடு - இளிவரல். பயன் கழறல். மேற்பொதுவகையாற் கழறினான், ஈண்டு விசேட வகையாற் கழறினான். (156) தலைவன் நிகழ்பவைகூறல் அஃதாவது பாங்கன் கவன்றுரையாநிற்ப இத்தலைவியின் உறுப்புக் களின்கண் என்வலி ஈடுபடுவதன் முன்னர் நின்னைக்காட்டிலு முலகியல் நிலையினை மிகுதியுமறிவேன். ஆதலான் இச்சம்பந்தத்தினை யாய்ந்து விட்டுவிடாதிருப்பா யெனக்கூறா நிற்றல். | | கடலினை வாய்ப்பெய் வடவையை மீட்டக் கடன்மடுத்தாங் | | | கடலினை வாய்வைத் துழல்கருங் கண்ணி யவயவத்தென் | | | மிடலினை யாருமுன் மிக்கறி வேனின்னின் மேதினியின் | | | தொடலினை யாய்ந்து விடலினை மன்னோ துணையவனே. |
(இ - ள்.) கடனீரைத் தன்னிடத் தடக்கிக்கொள்கின்ற வடவைத் தீயினை மறுபடியும் அக்கடனீரானது தன்னுட்கொண்டாற்போல கோறற்றொழிலினைத் தன்னிடத்துக்கொண்டு சுழல்கின்ற மை தீட்டிய கண்ணையுடையவள் உறுப்புக்களான் என் வலியினைத் தன்னுட்கொள்ளு முன்னர் நின்னைக்காட்டிலும் (உலகியனிலையினை) மிகுதியா நானறிவேன். எனக்குயிர்த்துணைவனா யுள்ளவனே ! இப்பூமியினிடத்து இச் சம்பந்தத்தினை யாய்ந்து விடாதிருப்பாயாக வென்க. (வி - ம்.) கடல் : ஆகுபெயர். அத்து : தவிர்வழிவந்த சாரியை. மூன்றாவதன் றொகை. அடல் - கொலை. மிடல் - வலி. தொடலினை. சம்பந்தத்தை. விடலினை விடாதிருப்பாயாக. மன், ஒ : அசைகள். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமையுரைத்தல். (157) |