| நிற்பணி பவரு நிலைதிரி கலரென வற்புரை பாங்கன்வகுத்துரைத்தது அஃதாவது பாங்கன் தலைவனை நோக்கி நின்னை வணங்கினாருந் தன்னிலையினின்றும் வேறுபடார் அங்ஙனமாக நீ வருந்தற்குக் காரண மென்னையென வகுத்துக்கூறல். | | ஆலங் கொதித்தட மேல்வரு மேனு மடற்கெழுந்து | | | காலங் கொதித்துக் கனன்றுறு மேனுநிற் கண்டவரும் | | | சீலங் கொதித்த நிலைதிரி யார்செம்ம லேமலர்ந்து | | | நீலங் கொதித்த விழியாட் குடைவது நீதியன்றே. |
(இ - ள்.) நஞ்சமானது கொதித்தலுற்றுக் கோறற்கு வருமாயினும், கோறற்கு எழுச்சியுற்றுக் காலக்கடவுள் சீற்றங்கொண்டு உருப் பங்கொள்ளுமாயினும் நின்னைத்தரிசனஞ் செய்தவரும் ஒழுக்கம் மாறுபட்டுத் தம் நிலையினின்றும் மாறுபடார். (இங்ஙனமாக) தலைவனே (நீ) நீலநிறம் மிக்குத் தோன்றுகின்ற விழியினையுடைய ஒரு பெண்ணின் பொருட்டு மனம் மாறுபாடுறுவது முறையல்லவே யென்றா னென்க. (வி - ம்.) அடுதல் - கொல்லுதல். காலம் - காலக்கடவுள். இதனைக் "காலமுலகம்" என்னும் தொல். சொல். சூத்திரத்தானறிக. மெய்ப்பாடு : அழுகை. பயன் : பாங்கன் வகுத்துரைத்தல். (160) தலைவன் கையற்றுரைத்தல் அஃதாவது பாங்கன் வகுத்துரைப்பக் கேட்ட தலைமகன், புனலோடும் வழிப்புற்சாய்வதன்றி வேறென் செய்யும். இரும்பினை இழுக்குங்காந்தம்போல மான் என்னரிய உயிரை யீர்த்ததெனக் கூறாநிற்றல். | | ஒழுகிய வெள்ளத் தெதிர்நின்ற மென்புல் லொழுக்கின்வழி | | | முழுகுவ தல்ல தெழுவதுண் டேமுடி வானவர்சூழ் | | | தொழுகுல மேயிரும் பீர்க்குஞ் சுரிமுகக் காந்தமென | | | எழுகிளி யோப்பு மடமானென் னாருயி ரீர்த்ததுவே. |
(இ - ள்.) இடையறா தொழுகுகின்ற நீர்ப்பெருக்கின் எதிரில் நின்ற மெல்லிய புல்லானது நீரொழுக்கின் வழி மூழ்குவதல்லாமல் எழுவ தெக்காலத்துமுளதோ இல்லை. முடியினையணிந்த தேவர்கள் யாவரும் சூழ்ந்து துதிக்கின்ற தெய்வமே இரும்பினைத் தன் பாலீர்த்துக் கொள்ளும் சுரித்த முகத்தினையுடைய காந்தத்தைப்போல (தினைக்கதிரைக் கொய்ய) எழுகின்ற கிளியினை ஓட்டுகின்ற இளமை பொருந்திய மான் எனது அரிய உயிரினை யிழுத்துக்கொண்ட தென்க. (வி - ம்.) தொழுகுலம் - தெய்வம். காந்தம் - ஊசியினை யிழுக்கும் ஒருவகை உலோகம். ஓப்பும் - ஓட்டும். மடம் - இளமை. மெய்ப்பாடு : அழுகை. பயன் : செயலற்றுரைத்தல். (161) |