| பாங்கன் ஆற்றுந்தன்மை தேற்றிலையென்றல் அஃதாவது செயலற்றுரைத்த தலைமகனை நோக்கி உனக்கியல்பாக அமைந்த பெருமைகள் யாவையும் மனத்தை வெளியிற் செலவிடுத்து மறந்தாயெனக் கூறாநிற்றல். | | எல்லா முணர்ந்த குறுமுனிக் கோத்துரைத் திட்டதுமுன் | | | கல்லா லடியி லிருந்தார்க் கொருமொழி காட்டியதும் | | | வில்லா லவுணக் குலம்வே ரறுத்துவிண் ணோர்க்கருளும் | | | வல்லாண் மையுமற்றும் பொச்சாத்தி செல்ல மனம்விடுத்தே. |
(இ - ள்.) பல்வகைக் கலையாவுமுணர்ந்த குறுமுனிவனுக்கு நூற் பொருளைச் செவியறிவுறுத்தினமையும், பண்டைக்காலத்திற் கல்லால மரத்தினடியிலெழுந்தருளிய இறையவனுக்கு ஒப்பற்ற பிரணவ மந்திரத்தினுட் பொருளை யறிவித்தமையினையும் விற்படையான் அவுணக் குலத்தின் வேரினையறுத்துத் தேவர்கட் கருள்செய்த வலிய ஆண் தகைமையினையும் பிறவாகிய வீரச்செயல்களையும் மனத்தை வெளியிற் செலவிட்டு (உன்னிலையினை) நீயே மறந்திருக்கின்றா யாதலால் வருந்துகின்றாயென்றா னென்க. (வி - ம்.) ஓத்து - நூற்பொருள். ஒருமொழி - பிரணவம். பொச்சாத்தி - மறந்தாய். மெய்ப்பாடு : இளிவரல். பயன் : தலைவனைத் தெருட்டல். (162) பாங்கன் தெருட்டுந்தன்மை மருட்டினை யென்றல் அஃதாவது பாங்கன் கிழவனை நோக்கி ஐயனே ! பேரறிவாளர்க்கு அறிவுறுத்துவார் யார். அவர் கருதியாங்கு ஏனையோர் ஒழுகுவாராவர். ஆதலான் பிறரைத் தேற்றுகின்ற நின்னிலைமையினை மயங்கி மறந்தனை யெனக் கூறாநிற்றல். | | முற்று முணர்ந்த முதுக்குறை வாளர்க்கு முன்னியொன்று | | | பற்றும் வகையெவ ரேதெரிப் பாரவர் பண்பின்வழி | | | மற்று மறிந்து நடப்பதல் லால்வடி வேற்கரவா | | | எற்று மணித்திரை முந்நீர் முதிர்ந்த விருநிலத்தே. |
(இ - ள்.) கூரிய வேற்படையைக் கரத்தின் கண்ணுடையவனே. கரையை மோதுகின்ற முத்துக்களையுடைய திரையோடு கூடிய நீர் நிறைந்த பெரியபூமியின்கண் பேரறிவுடையார்க்குக் கருதியொரு பொருளுட்கொள்ளும் வகை தெரிப்பவர் யாவர். அப்பெரியார் குணப் பண்பின் வழியே (அவர் உட்கிடையைத்) தெரிந்து நடத்தலன்றி யென்க. (வி - ம்.) மணி - முத்து. முந்நீர் - கடல். முதிர்தல் - நிறைதல். மெய்ப்பாடு : இளிவரல். பயன் : மருட்டினை யென்றல். (163) பாங்கன் வினைத்திற முரைத்தவள் இயற்றிறம் வினாதல் அஃதாவது பாங்கன் உனக்கிங்ஙனமாய ஏதப்பாட்டினைச் செய்தாள் இலக்கணம் யாவையென வினாவா நிற்றல். |