பக்கம் எண் :

992தணிகைப் புராணம்

 வீசுந் தரங்கக் கடல்விழு வோரின்விம் மாந்துளத்தை
 ஆசுந் தடையி னிறுத்தவல் லாவயில் வேலிறைவா
 பேசுந் தனுவினை யாரே பெயர்க்கவல் லார்பெயரக்
 கூசுந் தளிரடி மாதியல் யாதினிக் கூறுகவே.

(இ - ள்.) அலையை யெறிகின்ற கடலின்கண் விழுந்திறப்பவர் செயல்போல இறுமாப்படைந்து உள்ளத்தினைச் சிறிது தடையேதுவாக நிறுத்தவல்லமையிலவாகிய கூர்மை பொருந்திய வேற்படையையுடைய இறைவனே ! எல்லாரானும் புகழப்படுகின்ற உடலினை (பால் வரை தெய்வத்தான் பகுக்கப்பட்ட காலவளவல்லாமல் இடையே) நீக்க வல்லவர் யாவர். ஒருவருமிலர். பெயர்த்தடியிடுதற்கு வருந்தும் தளிர் போன்ற அடியினையுடைய நின்னாற் காணலுற்ற மாதி னிலக்கணம் யாது இனிக் கூறுவாயாக வென்றானென்க.

(வி - ம்.) விம்மாந்து - இறுமாந்து. ஆசும் - சிறிதும். வல்லா - வலிமையில்லாத. தனு - உடல். கூசல் - வருந்தல். இயல் - இலக்கணம். மெய்ப்பாடு : அச்சம். பயன் : ஆற்றுவித்தல்.           

(164)

தலைவ னவளியல் பாங்கற் குணர்த்தல்

அஃதாவது இயல்கேட்ட பாங்கற்கு அவளை யெய்தினாற் போன்ற பெரிய வின்பெய்தி ஆற்றுதலை உடையனாய்க் காணப்பட்டாளுக்கு இயல் இவையெனக் கூறாநிற்றல்.

 பொன்னொக்குங் கொங்கைப்பொறி சுணங்கேர்முலை போதொடொக்கும்
 மின்னொக்கு நுண்ணிடை செங்கழு நீரொக்கும் வேல்விழிமா
 தென்னொக்கு மேனி யுளமுந் தனவ வெனவவொக்கும்
 நின்னொக்கு நீர்மையில் லாய்செல்லு மாலிந் நெடுவதியே.

(இ - ள்.) நின்னிடத்துளவாகிய நீர்மையோடு கூடிய குணங்கள் பிறர்மாட்டிலாதவனே (அவள்) கொங்கையின் கண்ணுள்ள பொறித் தேமல்கள் (நிறத்தான்) பொன்னை யொக்கும். அழகிய முலைகள் பருவத் தரும்பினை யொக்கும். நுண்ணிய இடையானது மின்னலை ஒத்திருக்கும். வேற்படை போன்ற கண்கள் செங்கழுநீர்ப்பூவை யொக்கும். அப் பெண் (தலைமைக் குணத்தால்) என்னை யொப்பாள். அவடன்னுடையவாகிய உடலும், உளமும். என்னுடையவாகிய உடலினையும் உளத்தினையுமொக்கும். இந்நீண்ட வழியே செல்லுவாளென்க.

(வி - ம்.) தனவ, எனவ என்பன ஆறாம் வேற்றுமை அகர வுருபு. நினவ கூறுவல், எனவ கேண்மதி என்றாற்போலக் கொள்க. வதி - வழி மெய்ப்பாடு : உவகை. பயன் : பாங்கற் குணர்த்தல்.

(165)

பாங்கனைச் செல்க வென்றல்

அஃதாவது. இயல்கேட்ட பாங்கனைத் தலைவன் உலகின்கண் மக்கள் உன்னை நினைத்து உன்னால் நினைத்த காரியங்களைப்பெறுவர். அங்ஙனமாய நீ செல்லில் அவள் கூட்டம் அமையாமை உண்டோ? அக்கூட்டம் வேறு யாவராலாகுமென்றா னென்க.