| (இ - ள்.) இம்மாதரின் பின்னர்ச்சென்று திரிந்துழலாமலும் இவள் நமதன்பால் முடிவு பெறுமென்று கருதியும் உலகானதறிய அதிகரிக்காது (தன்னுள்ளடக்கிக்) காத்த தலைவனே அறிவின்றிண்மையை யுடையான். இத்தலைவியைத் தாய் தந்தையர் வெளிச் செலவினுக்குச் செலுத்து ஞான்று (இவள் செல்லின் பலருமிறப்பர். அங்ஙனமிறவா வண்ணம் தடுப்போமென) தும்மல் செய்து (இவளைத் தடைசெய்யாது) நின்றவர்கள் பழைமையையுடைய பூமியிடத்து (பழிபாவங்கட் கச்சுறாத கீழ்மக்களே யாவரென்க. (வி - ம்.) ஆதரவு - அன்பு. நாடறிந்து நாடறிய எச்சத்திரிபு. விம்முதல் - அதிகரித்தல். வெளிவிடுங்கால் - வெளியே விடுஞான்று, இதனை "நீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப், போதரவிட்ட நுமருந் தவறிலர்" என்ற கலியடியானுணர்க. வெளிச் செலவினுக்குத் தும்மல் தடையென்பதனை "தும்முச்செறிப்ப" என்னுங் குறளடியானுணர்க. மெய்ப்பாடு உவகை பயன் மகிழ்தல். (172) பாங்கன் வருத்தந் தகுமென வுரைத்தல் அஃதாவது, தலைவனை வியந்து கூறிய பாங்கன் இவ்வுருவினைக் கண்டு தலைவன் வருந்திய வருத்தம் தகுமெனக் கூறாநிற்றல். | | தோன்றான் றனதொரு கூற்றிற் சுடர்த்தொடி யாளணியாய் | | | ஆன்றா னெனினும் பிரிவரி தேயறி யாமையந்தோ | | | மான்றா யெனவு நிறைபொறை சால்பு மதிமுறையும் | | | கான்றா யெனவுங்கை வேலனை வீணே கழறினமே. |
(இ - ள்.) உருவிலியாகிய இறைவன் தன்னொரு பாகத்தில் ஒள்ளிய வளையலையணிந்த அம்மையாரை யழகாகப் பொருந்தியிருப்பவனாயினும் (அவளை விட்டுப்) பிரிதலில்லையாகும். கையின்கண் வேற்படையையுடையானை மயக்கமுற்றனை யெனவும், நெஞ்சினை நிறுத்தலும், (பல்குரைத்துன்பினைப் பொறுக்கும்) பொறையினையும் அமைதிக்குணங்களையும், அறிவினையும், (உலகியன்) முறையினையும் நீங்கினாய் எனவும் பயனின்றி இடித்துரைத்தனம். (இங்ஙன மிடித்துரைத்தல்) நமதறியாமையே யாகும். ஐயோ நாமென் செய்வோ மென்றா னென்க. (வி - ம்.) தோன்றான் - பெயர். மான்றாய் - மயங்கினை. நிறை - நெஞ்சடக்கம். கான்றாய் - நீங்கினை. மெய்ப்பாடு : மருட்கையைச் சார்ந்த பெருமிதம். பயன் : தலைமகனை வியத்தல். (173) வேறு | | பாங்கனா முறைக்க ணின்று பரிந்துபல் கிளவி காட்டி | | | ஆங்கவன் றன்னைக் கண்ட வடலிப முகத்தெம் மண்ணல் | | | ஈங்கிவ ணிலைமை கூறி யிடந்தலைப் படுங்கா றையன் | | | தாங்குத லரிதென் றுன்னித் தறுகண்மா வேழமானான். |
|