பக்கம் எண் :

களவுப் படலம்997

(இ - ள்.) பாங்கனாகு முறைமைக்கணின்று விரும்பிப் பல வார்த்தைகளைத் தலைவனோடு கூறி அவ்விடத்து அத்தலைவனைப் பார்த்த கொல்லுதலமைந்த வலியினையுடைய யானைமுகத்தையுடைய எமது தலைவன் இஞ்ஞான்று (தலைவியைக் கண்டு வந்து) அவணிலையினைக் கூறுதலாற்றலைவன் இடந்தலைப்பாட்டின்கண் பொருந்தும்வரையும் வேட்கையை யடக்கிநிற்றல் அருமையென்று நினைத்து அஞ்சாமை யுடைய யானை வடிவங்கொண்டன னென்க.

(வி - ம்.) கிளவி - மொழி. இபம் - யானை. ஐயன் - தலைவன் ; முருகன். தறுகண் - அஞ்சாமை.

(174)

 மும்மதக் கலுழி பாய முகமறிந் தலையக் காது
 மைம்மலை யுலநாற் காலின் மருவின தூளி யாகக்
 கொம்மெனத் தருக்கள் சாய்த்துக் குவட்டின முருட்டிச் சேய்க்கண்
 கைம்மலை முழங்கி நேரே கடுகிட்ட ததனைக் கண்டாள்.

(இ - ள்.) (கன்னம், கை, கோசமாகிய மூன்றிடத்தினின்றும் பாய்கின்ற) மும்மதமாகிய காட்டாறு பாயாநிற்கக் காதுகள் முகத்தினிடத்து மடங்குதல் செய்து அசையா நிற்க, மேகந்தங்குகின்ற மலையின் கண்ணுள்ள திரண்டகற்கள் நாற்கால்களிற் பொருந்தியன தூளாக விரைவாக மரங்களைத் தள்ளி மலைச்சிகரங்களைக் கீழேதள்ளிச் சேய்மைக்கண் யானையானது முழக்கஞ்செய்து எதிரே அணுகியது. அதனை அம்மையார் பார்த்தாரென்க.

(வி - ம்.) மை - மேகம். உலம் - திரண்டகல். கொம்மென - விரைவுக்குறிப்பு. கைம்மலை - யானை.

(175)

 போமிடம் வேறு காணாள் பொள்ளென வெகுளி நீங்க
 நாமவுள் ளத்த ளாகி நடுங்கிமீண் டிரிய லுற்றாள்
 ஆமது தெரிந்து கள்வ னியல்பினாங் கணைவான் போலக்
 காமர்முன் னுருவ னாகிக் கன்னிமுன் விலங்கிச் சென்றான்.

(இ - ள்.) (அம்மையார்) போகுமிடம் வேறுகாணப் பெறாளாய் விரைவாகச் சீற்றம் நீங்க அச்சத்துடன் கூடிய மனமுடையளாய் நடுங்குதல் செய்து திரும்பி ஓடுதலுற்றனள். இங்ஙனமாகுஞ் செயலினை யறிந்த கள்ளத்தன்மையையுடைய இறைவன் இயற்கையாக அங்கட் பொருந்துவான்போல யாவரும் விருப்பங்கொள்கின்ற (காட்சிக்கட்கொண்ட) வடிவினையுடையனாகி அம்மையார் முன் குறுக்கிட்டுச் சென்றனனென்க.

(வி - ம்.) பொள்ளென - விரைவுக்குறிப்பு. நாமம் - அச்சம். ஆம் - ஆகும். கள்வன் - முருகன். விலங்கி - குறுக்கிட்டு.

(176)

 அஞ்சலை யஞ்ச லென்னா வணைத்தொரு கரத்தின் மாதைக்
 குஞ்சர மடுத்துச் சீறக் குமைப்பவன் போல வேற்கை
 குஞ்சியின் மேக்க தாக்கிக் கும்பிடக் களித்து வேட
 மஞ்சனை யஞ்சிற் றென்ன மறைந்தது தெய்வ வேழம்.