பக்கம் எண் :

திருவரங்கத்தந்தாதி101

இங்குத் தானம் முதலியனவாகக் கூறினது, சுவர்க்கம் முதலிய சிற்றின் பங்களை உத்தேசித்துச் செய்யும் காமியகருமங்களை; முத்தியுலகத்து நிரதி சயவின்பத்தைப் பெறுதற்கு உபயோகமாகச் செய்யும் நிஷ்காம்ய கருமங்களை யன்றென் றறிக. தானம் - சற்பாத்திரங்களிலே கொடுத்தல் என்றும், தியாகம் - வரையறையின்றிப் பொதுப்படக் கொடுத்தல் என்றும் வேற்றுமை யுணர்க; முன்னது - புண்ணியக்கொடை யென்றும், பின்னது - புகழ்க் கொடை யென்றுங் கூறப்படும்.

தாநம், த்யாகம், தபஸ், தீர்த்தம், ஹவிஸ், யாகம், வேதா, நந்தீ, ஆகண் டலன், பரந்தாமம் - வடசொற்கள். அவி - வைதிகாக்கினியில் மந்திரபூர்வ மாக ஓமஞ்செய்யப்படும் நெய்ம் முதலிய தேவருணவு. நந்துதல் - கெடுதல்; இங்கு, நன்றாகப்பசநமாதல். நந்துயாகம் - வினைத்தொகை. நந்தியாகம் என்பதில் இகரத்தை, "யவ்வரி னிய்யாம்" என்றபடி நிலைமொழியீற் றுக் குற்றியலுகரம் திரிந்த தென்றாவது, "யவ்விற்கு, இய்யும் மொழிமுதலாகி முன்வருமே" என்றபடி வருமொழிவடசொல்லின் யகரத்துக்குமுன் வந்த இகர மென்றாவது கொள்க. ஆகண்டலன் - (பகைவரை) நன்றாகக் கண்டிப்பவன். பரந்தாமம் - மேலானஇடம். தரும் - முற்று. இழிபாயின - பெயர்; செயப்படுபொருள். தந்திடும் என்றதில் இடு - துணிவுணர்த்தும். பகல் - சூரியனுக்கு இலக்கணை. நந்தி என்றதன் நகரம், யமகத்தின்பொருட்டு னகரமாகப் கொள்ளப்பட்டது.

(78)

79.தாமரைமாத்திரைமூப்பற்றவானவர்தண்ணறுஞ்செந்
தாமரைமாத்திரைவந்தாடலைவரைத்தண்ணரங்க
தாமரைமாத்திரைபோல்வளைந்தேற்றுத்தருப்பொருட்டால்
தாமரைமாத்திரைக்கேசங்கினோசையிற்சாய்ந்தனரே.

(இ - ள்.) தாமரை மாத்திரை - பதுமமென்னுந்தொகையளவுள்ளவர் களான, மூப்பு அற்ற வானவர் - முதுமையில்லாத இயல்பையுடைய தேவர்கள், தரு பொருட்டால் - பாரிஜாததருவின்நிமித்தமாக, திரை தண் நறுஞ் செம் தாமரை வந்தாள் மா தலைவரை தண் அரங்க தாமரை - திருப் பாற்கடலிற் குளிர்ந்த பரிமளமுள்ள சிவந்த தாமரைமலரின்மீது தோன்றி னவளான திருமகளினது கணவரும் குளிர்ந்த ஸ்ரீரங்கத்தை இடமாகக் கொண்டவருமாகிய நம்பெருமாளை, மா திரை போல் வளைந்து ஏற்று - பெரிய திரைச்சீலைபோலச் சூழ்ந்துஎதிர்த்து, சங்கின் ஓசையின் - (அப் பெருமான் ஊதிமுழக்கிய) சங்கத்தினோசையினால், தாம் -, அரை மாத்திரைக்கே - அரைமாத்திரைப்பொழுதிலே, சாய்ந்தனர் - மூர்ச்சித்து வீழ்ந்தனர்.

பதுமமென்பது, ஒருபெருந்தொகை; அது, கோடியினாற் பெருக்கிய கோடி. இங்குப் பதுமமென்ற அத்தொகையை அதற்கு ஒருபரியாயநாமமாகிற "தாமரை" என்ற சொல்லினாற் குறித்தது. லக்ஷிதலக்ஷணை. மாத்ரா என்ற வடசொல் விகாரப்பட்டது. தா - வருத்தம்மிக்க, மரை - மரணமும், மா - மிகுந்த, திரை - தோற்சுருக்கமும், மூப்பு - முதுமையும், அற்ற வானவ ரென்று உரைப்பாரு முளர். திருப்பாற்கடல்கடைந்தபோது, அதனினின்று மலர்ந்த செந்தாமரைமலரை ஆசனமாகக்கொண்டு திருமகள் திருவவதரி த்தன ளென்று புராணம் கூறும். முதலடியிலும் இரண்டாமடியிலும்