வன் வள் நம் கலியன் புகழ் தாள் - மகிழமலர்மாலையையுடைய ஞானச் செல்வரான நம்மாழ்வாரும் ஞானவளத்தையுடைய நமதுதிருமங்கையாழ் வாரும் துதிசெய்த திருவடிகளே, எனக்கு என்றும் மா நிதி - அடியேனுக்கு எப்பொழுதும் பெரியசெல்வமாம்; (எ - று.) வண்ணம் என்பதற்கு - வண்ணமென்னும் உறுப்புக்கு இடமான என்றும் பொருள்கொள்ளலாம்: செய்யுளுறுப்புக்களிலொன்றாகிய வண்ணமாவது - ஒரு பாவின்கண் நிகழும் ஓசைவிகற்பம்; அது, வல்லெழுத்துமிக்கு வருதலாகிய வல்லிசைவண்ணமும், மெல்லெழுத்து மிக்குவருதலாகிய மெல்லிசைவண்ணமும், இடையெழுத்துமிக்குவருதலாகிய இயைபுவண்ணமும், நெட்டெழுத்துப்பயின்றுவருதலாகிய நெடுஞ்சீர்வண்ணமும், குற்றெழுத்துப்பயின்றுவருதலாகிய குறுஞ்சீர்வண்ணமும், நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் சமமாக விரவிவருதலாகிய சித்திரவண்ணமும், ஓசையான்ஒழுகி நடப்பதாகிய ஒழுகுவண்ணமும் முதலாகப் பலவகைப்படும். கலிப்பா முதலிய நால்வகைப்பாக்களில் ஒவ்வொன்றன் இனமும், தாழிசை துறைவிருத்தம் என்று மூன்றுவகைப்படும். மக்கள்மாட்டு, மாட்டு - ஏழனுருபு: நான்கனுருபின்பொருளில் வந்தது. வண்ணம் - வர்ண மென்ற வடசொல்லின் விகாரம். கலி கடல் - வினைத்தொகை. கலி - கடலுக்கு இயற்கையடை மொழி. அரங்கன்தாளென இயையும். வகுளம், நிதி - வடசொற்கள். தம்பக்கல் திருவுள்ளமுவந்து திருக்குறு கூர்ப்பொலிந்துநின்றபிரான் பிரசாதித்த மகிழமலர்மாலையைத் தரித்ததனால், நம்மாழ்வார்க்கு, வகுளாபரண ரென்று ஒரு திருநாமம் வழங்கும். ஆழ்வார்கள்பன்னிருவரில் திருவாய்மொழிப்பிரபந்தம் முதலிய நான்கு தமிழ்வேதங்களையும் அருளிச்செய்தவரான நம்மாழ்வாரையும், பெரியதிருமொழி முதலிய ஆறு அங்கங்களையும் அருளிச்செய்தவரான திருமங்கையாழ்வாரையும் எடுத்துக்கூறியது, மற்றைப் பதின்மர்க்கும் உபலக்ஷணம். எம் பெருமான் திருவடிகள், வேண்டும்பொருள்களையெல்லாந் தந்து தாமும் குறையாமையால், "மாநிதி" எனப்பட்டன. அத்திருவடியாகிய பெருநிதியைப் பெற்றுள்ளே னாதலால், ஒருவாறு வறுமைகெடவேண்டு மென்று உரையே னென்றார். ஓர்வண்ணம் தொடுத்து என இயைத்தலு மொன்று. | 86. | மானாகவருநிருதன்புன்மாயையின்மங்கையென்னு | | | மானாகவருமணியைமுன்னீங்கினன்மாயனென்பார் | | | மானாகவரும்பலர்சோலைசூழுமதிலரங்கா | | | மானாகவருமமுதேயதுவுநின்மாயமன்றே. | (இ - ள்.) மால் - பெரிய, நாகம் - புன்னைமரத்தினது, அரும்பு - அரும்புகள், அலர் - மலரப்பெற்ற, சோலை - சோலைகள், சூழும் - சூழ்ந்த, மதில் அரங்கா - மதில்களையுடைய திருவரங்கத்தி லுள்ளவனே! மால் நா கவரும் - ஆசையுடன் (அடியார்களால்) நாவிற்கொண்டு நுகரப்படுகிற, அமுதே - அமிருதம்போன்றுள்ளவனே! - மாயன் - ஆச்சரியகரமான குணஞ்செயல்களையுடையவனாகிய இராமபிரன், மான் ஆக வரும் நிருதன் புல் மாயையின் - மான்வடிவமாகவந்த மாரீசனென்ற அரக்கனது அற்பமான மாயை |